

கரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறியும் பரிசோதனையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (ஏப்.18) செய்தியாளர்களிடம் கூறும்போது, "தற்போது கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களில் 7 கருவிகள் மூலம் கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதன்மூலம், ஒரு நாளைக்கு ஆயிரம் மாதிரிகள் வரை சோதிக்கலாம்.
நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வரும் மாதிரிகளும் இங்கு பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், அறிகுறி உள்ளது என கருதப்படும் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள ஏதுவாக தற்போது கோவை மாவட்டத்துக்கு 2 ஆயிரம் விரைவு பரிசோதனை உபகரணங்கள் (Rapid test kit) வந்துள்ளன" என்றார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, "சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்கள், கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை பரிசோதிக்க இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் ஒரு துளி ரத்தத்தைக் கொண்டு இந்த சோதனை செய்யப்படுகிறது.
அதிகபட்சம் 15 நிமிடங்களில் தொற்று இருக்கிறதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். பரிசோதனை தேவைப்படுவோருக்கு அவர்களின் இடத்துக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது" என்றனர்.
இதுதவிர, கோவை மாவட்ட மின்சாதன பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் செயலர் ஜெ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கோவை அரசு மருத்துவமனைனைக்கு 'ஸ்வாப்' பரிசோதனை நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.