

கரோனா ஊரடங்கால் விவசாயிகள், அடுத்த போக காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் உள்ளதால் அடுத்தடுத்த மாதங்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் ‘கரோனா’ நோயால் மக்கள் உயிரிழப்பு, பாதிப்பு தொடர்கிறது. ஊரடங்கால் சந்தைகள் செயல்படாததால் வியாபாரிகள், விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
அதனால், விவசாயிகள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகள், கிராமங்களில் திறந்த தெருவோர காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு காய்கறிகளை விற்கின்றனர்.
ஆனால், சில்லறை வியாபாரிகள் அந்த காய்கறிகளை ஊரடங்கை காரணம் சொல்லி தட்டுப்பாடு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அதனால், விவசாயிகள் அடுத்தப்போக கோடை கால காய்கறி, பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
தற்போது ஒரளவு கோடை மழை பெய்யத்தொடங்கியுள்ளது. ஆனால், விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் அடுத்த ஒரு மாதத்தில் காய்கறிகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், தோட்டக்கலைத்துறை, வேளாண் அறிவியல் நிலைங்கள் விவசாயிகளை காய்கறி, பயிர் சாகுபடி செய்வதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை வேளாண் அறிவியல் நிலை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கடந்த சில நாளாக நல்ல மழை பெய்து வருகிறது.
அதனால், வறட்சியாக காணப்பட்ட அறுவடை செய்த நிலங்கள் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது. இந்த ஈரத்தை பயன்படுத்தி, நிலத்தை சட்டிக்கலப்பை கொண்டு மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டிவிட வேண்டும்.
இதனால், மண்ணின் நாள்பட்ட இறுக்கம் குறையும். மண்ணின் காற்றோட்டம், நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்கும். முன்பருவத்தில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தன்மையை செயல் இழக்க செய்யும். மண்ணின் தழைச்சத்து அதிகரிக்கும்.
இந்த கோடை உழவால் ஒராண்டு, பலாண்டு களைச்செடிகள் அழிக்கப்படும். கோடை உழவு கோடி நன்மை என்று முன்னோர்கள் சொல்வார்கள். இந்த உழவு செய்கோடை உழவு கோடி நன்மை என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
இந்த உழவு செய்து விவசாயிகள் காய்கறி, பயிர் சாகுபடியில் ஈடுபட்டால் தமிழகத்தில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு வராது. மேலும், தற்போதுள்ள நிலை அடுத்தடுத்த மாதங்களில் இருக்க வாய்ப்பு இல்லை. காய்கறிகளுக்கு நல்ல விற்பனை சந்தையும், அதன் விலையும் உயரும், ’’ என்றனர்.