

ஊரடங்கு உத்தரவால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயிகளின் வீடுகளில் பல கோடி ரூபாயிலான பருத்தி தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில், சருகணி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 12,500 ஏக்கரிலும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, போகலூர், முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரிலும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பருத்தியை பறிக்கும் இக்காலக்கட்டத்தில் ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளே, தங்களது குடும்பத்தினருடன் இணைந்து பருத்தியை பறித்து வருகின்றனர். மேலும் கமிஷன் கடைகள் திறக்கப்படாததால் பறித்த பருத்தியை விற்க முடியாதநிலை உள்ளது.
இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வீடுகளில் பல கோடி ரூபாயிலான பருத்தி தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து சாலைக்கிராமம் பருத்தி விவசாயிகள் கூறியதாவது: சில இடங்களில் பருத்தியை பறிக்க ஆள் கிடைக்காமல், அப்படியே செடியிலேயே விட்டுவிட்டனர். தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் முற்றிய பருத்திக் காய்கள் வெடித்து பஞ்சாக வெளியேறி வருகிறது.
மேலும் பருத்தி பறிக்கப்பட்ட இடங்களில் கமிஷன் கடைகள் இல்லாததால் அவற்றை விற்க முடியவில்லை. இதனால் மாடிகளில் காயவைத்து வீடுகளிலேயே தேக்கி வைத்துள்ளனர். பல நாட்கள் தேக்கி வைத்தால் பூஞ்சாணம் பாதிக்க வாய்ப்புள்ளது.
மேலும் பருத்தியை விற்க முடியாததால் தனியாரிடம் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், என்று கூறினர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏப்.20-க்கு பிறகு பருத்தி கமிஷன் கடைகள் திறக்க வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள் பருத்தியில் ஈரப்பதம் ஏற்படாமல் பாதுகாத்து வைக்க வேண்டும், என்று கூறினார்.