

இந்தியாவிலேயே முதன்மையானதாக, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் காற்று கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், "இந்தியாவில் மிகவும் நகரமயமானதும், தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணியாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை உள்ளது.
எனவே காற்றின் தன்மையை நகர மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் கண்காணிப்பது மற்றும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது.
எனவே காற்றின் தன்மையை தொடர்ச்சியாக உடனுக்குடன் கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் 25 இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் காற்றின் தன்மை குறித்த தகவல்களை முழுமையாக சேகரிக்க இயலும்.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் இத்தகைய தொடர் காற்று கண்காணிப்பு அமைப்பானது இந்தியாவிலேயே முதன்மையானதும் மற்றும் தனிச் சிறப்பும் வாய்ந்ததாகும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.