

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் அவர்களின் விருப்பத்தைக் கேட்டு இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். வெள்ளாடிச்சிவிளை, தேங்காய்பட்டிணம், மணிக்கட்டிப் பொட்டல் உள்பட பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிவாசிகள் வெளியே செல்லவும், இவர்கள் பகுதிவாசிகள் வெளியேறவும் தடைசெய்யப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இந்த பகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா வார்டில் சிகிச்சையில் இருப்போருக்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் நாகர்கோவிலில் உள்ள காலச்சுவடு பதிப்பகம் அவர்களுக்கு இலவசமாக நூல்களை வழங்கியுள்ளது. அப்படியிருந்தும்கூட சிலர் தங்களுக்கு புத்தகங்கள் வேண்டாம் என மறுத்துள்ளனர்.
இதுகுறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன் சமூகவலைதளத்தில் வேதனையோடு பகிர்ந்துள்ளார். அதில், ‘கரோனாவால் பாதிக்கப்பட்ட 16 நபர்கள் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் காலச்சுவடு சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் வாசிக்க அன்பளிப்பாக நூல்களைத் தரவிரும்புவதாக தெரிவித்தோம். உடனே, இரண்டு மணிநேரத்தில் 16 பேரையும் கைபேசிவழித் தொடர்புகொண்டு அவர்கள் விரும்பும் புத்தகங்களைக் கேட்டு அனுப்பி வைத்தனர். அந்த புத்தகங்களை இன்று கிருமிநாசினியால் சுத்தப்படுத்தி வழங்கினோம்.
16 பேரில் ஆறுபேர் கதை சம்பந்தமான நூல்களைக் கேட்டிருந்தார்கள். ஒருவருக்கு இரண்டு நூல்கள் என்று கணக்கிட்டு 12 நூல்களும், அவர்கள் குடும்பத்திலிருக்கும் குழந்தைகளுக்காக 5 நூல்களும் அனுப்பி வைத்தோம். ஆறு பேர் படிக்க நூல்கள் வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்கள். மூவர் மத நூல்கள் இருப்பதால் தேவை இல்லை என்றார்கள். ஒருவர் கைபேசியை எடுக்கவில்லை. நமது கல்வித் திட்டத்தில் சிறக்க ஒரு மாணவன் பொது நூல் எதையும் படிக்காமல் பாடப்புத்தகங்களை மட்டுமே படித்தால் போதுமானது. அதேபோல அடிப்படைவாத இயக்கங்கள் மத நூல்களிலிலேயே அனைத்தும் உள்ளது என்று போதிக்கிறார்கள். இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கரோனா சிகிச்சையில் இருப்பவர்களைத் தொடர்புகொள்ள முடிவு செய்திருக்கிறோம்’ என்று வேதனையோடு பகிர்ந்துள்ளார் கண்ணன்.