

அரசியல் மாச்சர்யங்களுக்கு இது நேரமல்ல கரோனா பேரிடர் காலத்தில் தேவையானது சமூக இடைவெளிதான், அரசியல் இடைவெளியல்ல அறிக்கை போர் செய்யாமல் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயல் படுங்கள் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இருவருக்கும் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கெதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 12 கண்காணிப்புக்குழுக்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டு அதன் வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, கருவிகள் கொள்முதல், சிகிச்சை நோயாளிகள் குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது.
கரோனாவுக்காக மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்காதபோது அதை கேட்டுப்பெறும் தைரியம் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இதுகுறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை ‘அவர்கள் என்ன டாக்டர்களா? ஆலோசனை கேட்க’ என முதல்வர் பேசியதற்கு கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பேரிடர் காலத்திலும் இவர்கள் அரசியல் மோதலை விடமாட்டார்களா, பக்கத்து மாநிலம் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக்கட்சிகளையும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கிறார் தமிழகத்தில் இந்த சாபம் தீராதா என பலரும் கேட்கின்றனர்.
சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் இதே வேண்டுகோளை முதல்வர், எதிர்க்கட்சித்தலைவருக்கு வைத்துள்ளது.
இதுகுறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“70-80களில் கருணாநிதி-எம்.ஜி.ஆர், 90-2000த்தில் ஜெயலலிதா-கருணாநிதி இவர்களின் காலத்திற்குப் பிறகாவது “ஆளுங்கட்சியும்-எதிர்கட்சியும்” கீரியும்-பாம்பாக அறிக்கைகளால் அடித்துக்கொள்ளாமல் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஓரளவாவது ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பிருக்குமா என்று நினைத்ததுண்டு.
ஆனால், எடப்பாடி-ஸ்டாலின் காலத்திலும் அதே கதைதான் தொடர்கிறது. கரோனாவால் இறந்த மருத்துவ பணி சாராத குடும்பத்திற்கும் 1 கோடி நிவாரணம் கொடுக்கவேண்டும் என்பதுபோன்ற எக்குத்தப்பான கோரிக்கைகளை ஆளுங்கட்சியை நோக்கி ஸ்டாலின் முன்வைப்பதையும்...
’ஸ்டாலின் என்ன டாக்டரா..ஆலோசனை சொல்வதற்கு...எதற்குப் பேச வேண்டும் எதிர்கட்சிகளோடு..இது என்ன காவிரிப்பிரச்னையா கலந்துபேச’ என்று எகிறி அடித்து எடப்பாடி பதில் சொல்வதையும் இன்றைய தலைமுறையினர் எரிச்சலோடுதான் பார்ப்பார்கள் என்பதை ஆளுங்கட்சியும்-எதிர்கட்சியும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆளுங்கட்சி ஆகிவிட்டால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நான்தான் ராஜா என்ற நினைப்பு கூடாது. அப்படித்தான் நடந்து கொள்கிறது இன்றைய இபிஎஸ் அரசு.எதிர்க் கட்சிகளின் எந்தக் கருத்தையும் காது கொடுத்துக் கூட கேட்க மாட்டேன் என்பது எந்த வகையில் ஜனநாயகமாகும்?
அதேபோல், எதிர்கட்சி என்பதால் ஆளுங்கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் காட்டமாக விமர்சிக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. ஒட்டுமொத்த தமிழக நலனை கருத்தில் கொண்டு, எதிர்கட்சியானது, தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் ஆளுங்கட்சியைத் தட்டிக்கொடுத்து. சுட்டிக்காட்ட வேண்டிய குறைகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டினால் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டிப்பானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கரோனாவால் கடுமையான சமூக-பொருளாதார பாதிப்புகளை தமிழகம் எதிர்கொள்ள உள்ள சூழலில், இந்த அணுகுமுறை மேலும் அவசியமாகிறது. இப்போது ”சமூக இடைவெளிதான்” அவசியம்... ”அரசியல் இடைவெளியல்ல”..!! Need of the hour is "Social Distancing" NOT "Political Distancing".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.