Published : 18 Apr 2020 02:11 PM
Last Updated : 18 Apr 2020 02:11 PM

144 ஊரடங்கு; நிறுவனங்களுக்கான வாகன பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி 

அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி சீட்டு பெற பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்களைத் தவிர்த்து பிற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் செயல்பட ஏதுவாக அவற்றின் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்திற்காக தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அரசாணை எண் 152 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுநாள் வரையில் 652 நிறுவனங்களுக்கு மாநகராட்சியின் சார்பில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி அனுமதி அட்டையை பெற பெருநகர சென்னை மாநகராட்சி http://covid19.chennaicorporation.gov.in/c19/ இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவு சான்றிதழ் நகல், பணியாளர் அடையாள அட்டை நகல், வாகன பதிவு சான்றிதழ் நகல் மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஆகிய ஆவணங்களுடன் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் .

எனவே நிறுவனங்கள் அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வருவதை தவிர்த்து இணையதளத்திலேயே விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு இணையதளம் மூலமாகவே அனுமதி சீட்டு வழங்கப்படும். பார் கோடு கொண்ட அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x