கரோனா பரிசோதனை கருவிகள்: என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன? - தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்திற்கு கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவிலிருந்து நேற்று இந்தியாவுக்கு வந்த ரேபிட் கிட்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. சீனாவில் தமிழகம் ஆர்டர் கொடுத்த 4 லட்சம் ரேபிட் கிட்களில் 24 ஆயிரம் ரேபிட் கிட்-கள் நேற்று சென்னை வந்து சேர்ந்தது.

இது தவிர மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 12 ஆயிரம். அதன்படி 12 ஆயிரம் ரேபிட் கிட்-கள் இன்று சென்னை வந்தன. சீனாவிலிருந்து வந்ததையும் சேர்த்து மொத்தம் 36ஆயிரம் ரேபிட் கிட்-கள் தமிழகத்தில் உள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.18) முகநூல் பக்கத்தில், "கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in