

உடனடி வருமானத்துக்கு உறுதியில்லாமல் வாழ்க்கை நடத்துபவர்கள் கிடை மாடு மற்றும் ஆடு மேய்க்கும் கீதாரிகள். நாடோடி வாழ்க்கை என்பதால், ஆங்காங்கே விவசாய நிலங்களில் கிடைபோட்டுப் பிழைக்கும் இவர்கள் ஊரடங்கு காரணமாக ஆடு, மாடுகளைத் தொலைதூரத்துக்கு மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாமலும், சந்தைகள் செயல்படாததால் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள்.
எனவே, தங்களின் வாழ்வாதாரத்தைப் பேணவும் பட்டினியின்றி கரோனா காலத்தைக் கடக்கவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் இந்த கீதாரிகள்.
இதுகுறித்து மதுரை கிழக்கு ஒன்றியப் பகுதியில் கிடை அமைத்துள்ள மதுரை மாவட்டம் உ.வாடிப்பட்டியைச் சேர்ந்த கீதாரி அழகர் கூறுகையில், "தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, தஞ்சை, கோவை, காஞ்சிபுரம் என்று பல மாவட்டங்களில் இதுபோல கிடை ஆடு, கிடை மாடு மேய்ப்பவர்கள் இருக்கிறோம். ஒவ்வொருவரும் சுமார் 100 முதல் 1000 வரையில் கால்நடைகளை மேய்க்கிறோம். மதுரை மாவட்ட கீதாரிகள் சிவகங்கை, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி, திண்டுக்கல், நத்தம் வழியாகத் திரும்பவும் ஊர் வந்து சேர்வோம். தினமும் குறைந்தது 10 கிலோ மீட்டராவது மாடுகளை மேய்த்துச் சென்றால்தான் அவற்றுக்கு வயிறு நிரம்பும். வருகிற வழியிலேயே ஏதாவது கண்மாயில் தண்ணீர் காட்டுவோம். இப்போது ஊரடங்கு கெடுபிடி காரணமாக வெளியூர்களுக்குச் செல்ல முடியவில்லை.
இந்த மாடுகளை கட்டிப்போட்டும் தீவனம் போட முடியாது. அது கட்டுபடியும் ஆகாது. அவ்வளவு தீவனமும் கிடைக்காது. அதேபோல தான் எத்தனை லாரி தண்ணீர் என்றாலும் கால்நடைகளுக்குப் போதாது. எப்படியோ பக்கத்து கிராமங்களில் மேய்த்து கால் வயிறு, அரை வயிற்றோடு மாடுகளை காப்பாற்றி வைத்திருக்கிறோம். குறைந்தது 10 கிலோ மீட்டராவது மேய்ந்தால்தான் இரவில் பேசாமல் இந்த மாடுகள் படுத்து உறங்கும். மூக்கணாங்கயிறு கிடையாது என்பதால், பசியில் இருக்கிற மாடுகளை பாதுகாப்பது கடினம். எங்களுக்கும் வருமானம் இல்லை.
எங்களின் பசிக்குத் தேடுவதா, மாடுகளின் பட்டினியைக் கவனிப்பதா என்று தெரியாமல் பரிதவித்து வருகிறோம். விவசாயிகளிடம் பணப் புழக்கம் இல்லாததால், பக்கத்து ஊர்களில்கூட யாரும் கிடை போட அழைப்பதில்லை. எங்களுக்கென நல வாரியமும் இல்லை. எனவே, அரசு எங்களைப் போன்றோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.
இதற்கிடையே கால்நடை வளர்ப்போர் சார்பில் யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘ஊரடங்கு உத்தரவினால் ஆடு, மாடு மேய்த்தல், பராமரித்தல், பால் முகவர்களின் தொழில்கள் முடங்கிவிட்டன. யாதவர்களின் வாழ்வாதாரமான கால்நடைகளில் பல பசி, பட்டினியால் சாவை எதிர்நோக்கி நிற்கின்றன. பல கிராமங்களுக்கு பால் முகவர்கள் வர முடியாத சூழல் இருப்பதால், கறந்த பாலைக் கீழே கொட்டும் நிலைக்கு பால் மாடு வளர்ப்போர் ஆளாகியிருக்கிறார்கள்.
எனவே, வனத்துறையின் மேய்ச்சல் காடு மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மேய்ச்சலுக்கு எந்தத் தடையும் இல்லாத சூழலை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட அனைத்து கால்நடை வளர்ப்போருக்கும் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டுகிறேன்’ என்று கோரியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.