

அதிகாலை நேரத்தில் ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி வந்ததால் ஆட்டோவை உரிமையாளரிடம் கேட்டு பெற்று ஓட்டி சென்ற காவலரும், உதவிய ஆயுதப்படை காவலரும் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான விழுப்புரம் கோட்டக்குப்பம் பகுதியில் கரோனா நோய்த் தொற்று ஒருவருக்கு உறுதியானது. இதனால் 500 மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதி சாலைகள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அனைத்து சாலைகளும் முழுவதும் சீல் வைக்கப்பட்டன. தமிழகப்பகுதியிலிருந்து வருவதைத் தடுக்க போலீஸார் அப்பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 14-ம் தேதி அதிகாலையில் அப்பகுதியில் போலீஸார் கருணாகரன், ஆயுதப்படை காவலர் அருண்ஜோதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தியால்பேட்டை பெருமாள் நாயுடு வீதியை சேர்ந்தவர், அங்கு வந்து, , தனது மகள் குழந்தை பிறக்கும் தருவாயில் பிரசவ வலியால் துடிப்பதால் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல உதவுமாறு கோரினர்.
ஊரடங்கு நேரத்துடன் வாகனமும் அப்பகுதியில் இல்லாத சூழல் நிலவியது. அப்பகுதியில் ஆட்டோக்கள் வரிசையாக நிற்பதை பார்த்து அங்கிருந்த வீடுகளில் போலீஸார் கேட்டனர். அப்போது ஆட்டோ உரிமையாளர் பூமிநாதன், தன்னுடைய ஆட்டோவை வயது முதிர்வு காரணமாக அதிகாலை நேரத்தில் இயக்குவது கடினம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஆட்டோ உரிமையாளரிடம் சாவி பெற்ற கருணாகரன் ஆட்டோவை இயக்கினார். அவருடன் ஊர்க்காவல்படை காவலர் அருண்ஜோதி வழிகாட்டினார். ஆட்டோவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆட்டோவை கருணாகரன் ஓட்ட, முன்னால் வண்டியில் சென்று தடுப்புகளை ஊர்க்காவல்படை வீரர் மாற்றி வைத்தபடி, அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதைத்தொட்ந்து அப்பெண்ணுக்கு அரைமணி நேரத்தில் சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் தவித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய இவர்களை பலரும் பாராட்டினர்.
இச்சூழலில் காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் இன்று (ஏப்.17) அவர்களை பாராட்டி கவுரவித்தார்.
போலீஸார் கருணாகரனிடம் கேட்டதற்கு, "15 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டாக ஆட்டோ ஓட்டியுள்ளேன். அன்றைய தினம் திடீர் சூழலில் மீண்டும் ஆட்டோவை துணிச்சலுடன் எடுத்தேன். மிகவும் பயத்துடன்தான் ஆட்டோவை ஓட்டினேன். அந்நாளை மறக்கவே முடியாது" என்கிறார் படபடப்புடன்.