

தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக சென்னை உள்ளகரத்தைச் சேர்ந்த சி.செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1970-ம் ஆண்டுகளில் தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், தற்போது, மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதனால், தொழில்வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த சில மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்தது. இதனால், தமிழக மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையின் முன்னாள் தலைவர் வினோத்ராய் தலைமை யில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் உள்ளிட்டவை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ள சில அம்சங்களின் அடிப் படையில், மின்சாரத் துறைக்கு பெரும் இழப்பு என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை யில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு களுக்கு, தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. இவை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.
இந்த விசாரணை முடியும் வரை அவை அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார். மேலும், இவ்விவகாரம், எம்.எல்.ஏ.க்கள் குழுவின் ஆய்வில் தற்போது உள்ளதால், இதுகுறித்து எந்த ஒரு தீர்ப்பும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே, இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு தீரப்பில் கூறப்பட்டுள்ளது.