

பாபநாசம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக அமர்ந்து கறி விருந்து சாப்பிட்டு, அந்நிகழ்வை முகநூலில் நேரலையாக ஒளிபரப்பிய இளைஞரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாக சமுத்திரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர், கடந்த 15-ம் தேதி மதியம் கிராமப் பகுதியில் திறந்தவெளியில் அசைவ உணவு சமைத்து, தலைவாழை இலை போட்டு, கூட்டமாக அமர்ந்து சாப்பிடும் வீடியோவை முகநூலில் நேர லையாக ஒளிபரப்பி உள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர் பாக கபிஸ்தலம் போலீஸார் விசாரித்தபோது, இதே ஊரைச் சேர்ந்த சிவகுரு(29) என்பவர் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலைபார்த்து விட்டு, ஊரடங்குக்கு முன்பாக சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘கரோனா கொண்டாட்டம்’ என்ற பெயரில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில், 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக அமர்ந்து சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கறி விருந்துக்கு ஏற்பாடு செய்த சிவகுருவை கைது செய்த போலீஸார், மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.