

சென்னைக்கு குடிநீர் கொண்டுவர பயன்படும் கிருஷ்ணா கால்வாயில், தாமரைக்குப்பம் முதல்பூண்டி வரை பல்வேறு இடங்களில் சரிந்து சேதமடைந்துள்ள கரைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கிடையே கடந்த 1983-ம் ஆண்டு தெலுங்கு- கங்கை திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆண்டுதோறும் சென்னை குடிநீர் தேவைக்காக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
177 கி.மீ. நீள கால்வாய்
தண்ணீரை இங்கு கொண்டுவருவதற்காக 177.28 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டு, கடந்த 1996-ம் ஆண்டுமுதல் கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு செப். 25-ம் தேதிமுதல் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்தஏப்.15-ம் தேதி நிறுத்தப்பட்டது.
குடிநீர் பற்றாக்குறை அபாயம்
தற்போது 11,257 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய முக்கிய ஏரிகளில் 6,111 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் அதிகளவில் நீரை பயன்படுத்துவதால், கோடைக்காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அதைச் சமாளிக்க தமிழக அரசுகிருஷ்ணா நீரை திறக்க கோரிக்கைவைக்கும்போது, ஆந்திர அரசு தண்ணீரை திறக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால், தமிழக எல்லைக்குவரும் நீர் முழுமையாக பூண்டிஏரிக்கு வந்து சேர முடியாத வகையில், கிருஷ்ணா கால்வாயில் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி ஏரி வரையிலான 25 கி.மீ. தொலைவுக்கு பல்வேறு இடங்களில் மண் சரிந்து கரைகள் சேதமடைந்துள்ளன.
எனவே, சரிந்துள்ள கரைகளை சீரமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.