

சென்னையில் மதுபானக் கடைகள் திறக்காததால் மது கிடைக்காத விரக்தியில், டிக் டாக்கில் வந்த தகவலை வைத்துச் சொந்தமாக சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரோனா தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் சார்ந்த துறை தவிர மற்ற அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், மதுபான விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானப் பிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பல இடங்களில் 1000 ரூபாய் வரை மதுபானங்களை வாங்கி அருந்துகின்றனர். டாஸ்மாக் கடைகளை உடைத்து திருடிச் செல்வதும் பல மாவட்டங்களில் நடக்கிறது. சிலர் மெத்தனால், சானிடைசர், ஷேவிங் லோசன் உள்ளிட்டவற்றை வாங்கி அருந்தி உயிரிழந்ததும் நடந்தது.
மருத்துவர்கள் இதையே காரணமாக வைத்து மதுப்பழக்கத்தைக் கைவிட்டுவிடுங்கள் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் குடிமகன்கள் அதை மதிப்பதாக இல்லை. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் அவரது நண்பரும் டிக் டாக் காணொலியைப் பார்த்து சாராயம் காய்ச்சிக் குடித்ததால் கைதாகியுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை திருவிக குடியிருப்பில் வசிப்பவர் ராஜா (34). இவரது நண்பர் அதே பகுதியில் வசிக்கும் ஜார்ஜ் ஜோசப் (31). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இருவரும் எப்போதும் சேர்ந்தே மது அருந்துவது வழக்கம்.
இவர்கள் குடிப்பழக்கத்தில், கரோனா மண்ணை அள்ளிப்போட செய்வதறியாது திகைத்தனர். வார்னிஷ் பக்கம், சானிடைசர் பக்கம் போனால் மரணம் நிச்சயம் எனப் புரிந்துகொண்டு ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் ராஜா, தன் செல்போனில் டிக் டாக் செயலியில் காணொலியைப் பார்த்து வந்துள்ளார். அப்போது அதில் ஒரு குடிமகன் பாதுகாப்பான முறையில் சாராயம் காய்ச்சுவது குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காணொலி வெளியிட்டார். அதைப் பார்த்துப் புளங்காகிதம் அடைந்த ராஜா இதுபற்றி தனது நண்பர் ஜார்ஜ் ஜோசப்புக்குத் தகவல் சொல்ல, இருவரும் சேர்ந்து சாராயம் காய்ச்சிக் குடிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ஆட்டோ ஓட்டுநர் ஜார்ஜ் ஜோசப் வெல்லம், கடுக்கா, வெட்டிவேர் ஆகியவற்றை வாங்கி வந்து ராஜா வீட்டில் ஒரு குடத்தில் நீர் ஊற்றி ஊற வைத்துள்ளனர். மூன்று நாள் கழித்து இருவரும் அதைக் காய்ச்சியுள்ளனர். பின்னர் அதை எடுத்து இருவரும் குடித்துள்ளனர்.
இதைப் பெருமையாக சிலரிடம் கூற, சாராயம் கிடைக்காமல் வாடிநிற்கும் குடிமக்கள் சிலர் போலீஸ் காதில் போட, குடிசைத்தொழில் மூலம் சாராயம் காய்ச்சலாம் என முடிவெடுத்திருந்த ராஜாவின் வீட்டுக்கு தேனாம்பேட்டை போலீஸார் சென்றனர்.
அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார் அவர்கள் நோக்கம் சாராயம் காய்ச்சுவது என்றிருந்தாலும், அவர்கள் காய்ச்சிக் குடித்தது வெல்லம் கலந்த தண்ணீர் என்பதால் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து சிறு வழக்கு போட்டு ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.
கரோனா முடிவதற்குள் இந்தக் குடிமகன்களை இன்னும் என்னென்ன பண்ணப் போகுதோ என்று போலீஸார் தலையில் அடித்துக் கொண்டனர்.