

கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று (ஏப்.17) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா வைரஸ் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடாக, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு, பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை, வடமதுரை, அன்னூர், சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊரக பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகரப் பகுதிகளில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், கே.கே.புதூர், கவுண்டம்பாளையம், சேரன்மாநகர், போத்தனூர் ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லத்தடை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதியில்லை. கோவை மாநகரில் காவல் துறையின் சார்பில் 33 இடங்களில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,467 காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வெளிநபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன"
இவ்வாறு அவர் கூறினார்.