

கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சடகோபனுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த இரு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து, இருவரையும் சரியாக கவனித்துக்கொள்ளவில்லை, போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு மின்னஞ்சலில் புகார்கள் வந்தன.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர், மருத்துவர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கேட்டார் என்றும், கேட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார் என்ற பதிவும் சமூக வலைதளங்களில் கசிந்தது.
ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. மாணவர்கள் கேட்டவுடன் தேவையான மாத்திரைகள், உதவிகள் அளிக்கப்பட்டதாகவும், வேண்டுமென்றே யாரும் குழுவில் இருந்து நீக்கப்படவில்லை எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், புகார் குறித்து விளக்கம் கேட்டு கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சடகோபனுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இன்று (ஏப்.17) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் அந்தப் பொறுப்பிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.