கரோனா காலத்தில் ஊருக்கு உதவும் தாழக்குடி கிராம இளைஞர்கள்!

கரோனா காலத்தில் ஊருக்கு உதவும் தாழக்குடி கிராம இளைஞர்கள்!
Updated on
1 min read

ஊரடங்கால் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசின் நிவாரண உதவிகள் ஓரளவுக்கு கைகொடுத்தாலும் இன்னும் பலருக்கு இன்னல் தீரவில்லை. அப்படிப்பட்டவர்களுக்குத் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டம், தாழக்குடி கிராமத்தில் அப்படித்தான் களத்தில் நிற்கின்றனர் ஜீவா பேரவை இளைஞர்கள்.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். அதை மெய் என்று சொல்லவைக்கும் அளவுக்கு கரோனா பணியில் தங்கள் கிராம மக்களுக்காக களத்தில் இருக்கிறார்கள் இந்த அமைப்பினர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே தங்கள் பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் போட்டு பணியைத் தொடங்கினர். அது கிராமப் பகுதி என்பதால் விவசாயிகளின் வீடுகளில் இருந்தே மாட்டுச் சாணத்தைப் பெற்று அதோடு மஞ்சள், தண்ணீர் கலந்து கிராமத்தின் மூலை, முடுக்கெல்லாம் கிருமிநாசினியாகத் தெளித்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் தாழக்குடி பேரூராட்சி அலுவலகம் சென்ற ஜீவா பேரவையின் இளைஞர்கள், செயல் அலுவலர் யோகஸ்ரீயைச் சந்தித்து, பேரூராட்சியில் துப்புரவுப் பணி செய்யும் 20 தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கினர். இதேபோல் தங்கள் கிராமத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் 35 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரிசி, மற்றும் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் இலவசமாக வழங்கினர். கூடவே,‘கபசுரக் குடிநீர்’ தயாரித்தும் மக்களுக்கு விநியோகித்தனர்.

இதுபற்றி ஜீவா பேரவையின் தலைவர் மினேஷ், 'இந்து தமிழ் திசை'யிடம் கூறுகையில், “எங்கள் ஊரைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் மக்களும், உள்ளூரில் இருக்கும் நல்ல உள்ளங்களும் இந்தச் சேவைக்கு உதவினார்கள். நாங்கள் வெறும் கருவி அவ்வளவுதான். இப்போதைய சூழலில் எங்களைப் போன்ற இளைஞர்கள் இதுபோன்ற முயற்சிகளில் இறங்க வேண்டியது அவசியம். அதற்கு உள்ளூரில் இருக்கும் பொருளாதார பலம் படைத்தவர்களின் ஆதரவும் அவசியம். எங்கள் ஊரில் அவர்களின் ஆதரவால்தான் இது சாத்தியமானது.

பொதுவுடைமை இயக்கத் தலைவராக இருந்த ஜீவா அடிக்கடி தன்பெயரை மாற்றிக்கொண்டே இருப்பாராம். அதைப் பார்த்துவிட்டு அவரது ஆசிரியர் ஒருவர் இப்படி அடிக்கடி பெயரை மாற்றுகிறாயே சொத்து விஷயத்தில் சிக்கல் வராதா என்று கேட்டிருக்கிறார். உடனே ஜீவா, ‘குத்துக்கல்லுக்கு சொத்து எதுக்கு?’ எனக் கேட்டாராம். அவர் பெயரில் பேரவை வைத்துவிட்டு சேவை செய்யாமல் இருப்போமா? மத்திய - மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் இதேபோன்று அனைத்து இளைஞர்களும் தங்கள் பகுதி மக்களுக்கு உதவிகளைச் செய்து கரோனாவை ஒழிக்கத் துணைநிற்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in