

கரோனா ஊரடங்கில் 24 மணி நேரமும் ஒய்வின்றி பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு சுகாதாரத்துறையை போல் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மூன்றில் இரண்டு பகுதி களப் பணியாளர் காலியிடங்கள் உள்ளன. ஆனாலும், கரோனா ஊரடங்கு அறிவித்த இந்த நெருக்கடியான சூழலிலும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 24 முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வருகின்றனர். கோடை காலம் என்பதால் மின்சாரம் இல்லாவிட்டால் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் ‘கரோனா’ நோயாளிகள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மின்வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அதனால், ‘கரோனா’ பரவும் இந்த அசாதாரண சூழலிலும் துணை மின் நிலையங்களில் 24 மணி நேரமும் முககவசம் அணிந்தபடி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மின்வாரிய ஊழியர்களின் தொடர் உழைப்பினால் பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ் நாடு மின்சார வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் மண்டல தலைவர் ச.சசாங்கன் கூறியதாவது;
நாட்டில் இதுபோல் நோய்த்தொற்று பேரிடர் காலம் எப்போதும் ஏற்பட்டதில்லை. பொதுமக்களுடைய சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு உளவியல் ரீதியாக அவர்களுக்கு ஒரு மாற்றாக இருப்பது தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களே ஆகும். வீட்டில் இருந்தவாறு இந்த பொழுதுபோக்கு அம்சங்களை அவர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதன் மூலம் சிறந்த முறையில் ஊரடங்கு நாள்களை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல், மின்விசிறி, மின்சார விளக்குள் 24 மணி நேரமும் தற்போது பயன்படுத்தப்படுகிறது. கோடை காலம் என்பதால் இரவில் ஏசி போடாமல் மக்களால் தூங்க முடியாது.
அதற்கு மின்சாரம் அத்தியாவசிய தேவை. அதனால், தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் நோய் தொற்று அபாயத்திலும் மக்களுக்காக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாதாரண மின்தடை ஏற்பட்டாலோ, இடி மின்னல், காற்று, மழை ஆகியவற்றால் மின் பழுது ஏற்பட்டாலோ அவற்றை உடனடியாக சரி செய்யும் பணியில் மின்வாரிய களப்பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மின்தடையை நீக்கி வருகின்றனர்.
இப்படி பொதுமக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்துபணியாற்றி வரும் மின்வாரி களப்பணி யாளர்களுக்கு கரோனா நோய் தொற்று பாதுகாப்பு சாதனங்களான கை சுத்திகரிப்பு திரவம், கையுறை, முகக் கவசம் மற்றும் சோப்பு ஆகியவற்றை பகிர்மான வட்ட நிர்வாகமே கொள்முதல் செய்து பிரிவு அலுவலகங்களுக்கு வழங்கிட வேண்டும்.
‘கரோனா’ பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களை போல் மின்சார ஊழியர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும். மற்ற துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினப்படி போல் மின் வாரியத்தில் பகிர்மான பிரிவுகளில் பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு ரூபாய் 500 தினப்படி யாக வழங்கிட வேண்டும் கோருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.