

அத்தியாவசியப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்றதாக, விழுப்புரம் நகரில் 3 ரேஷன் கடைகளுக்கு அபராதம் விதித்து கூடுதல் ஆட்சியர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கரோனா நோய் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் நகரில் உள்ள ஒருசில ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முறையாகச் சென்றடையாமல் இடைத்தரகர்கள் மூலம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டதன் பேரில் இன்று (ஏப்.17) காலை கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், விழுப்புரம் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள 2 ரேஷன் கடைகளில் விற்பனை முனைய எந்திரத்தில் உள்ளபடி கடையில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் இல்லாமல் பொருட்கள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பொருள் இருப்பு விவரம் குறைவாக இருந்த காரணத்திற்காக ஒரு ரேஷன் கடைக்கு ரூ.4,625, மற்றொரு கடைக்கு ரூ.1,298, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு ரூ.4,725 என, கூடுதல் ஆட்சியர் அபராதம் விதித்தார்.