கரோனா நிவாரணப் பணியில் களமிறங்கிய மீனாட்சி திருக்கல்யாண சமையல் குழு

கரோனா நிவாரணப் பணியில் களமிறங்கிய மீனாட்சி திருக்கல்யாண சமையல் குழு
Updated on
1 min read

தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். திருமணத்தைத் தொடர்ந்து விருந்து நடைபெறுமல்லவா? அதைப்போலவே ஆண்டுதோறும் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறும். மதுரைக்கரசியின் கல்யாண விருந்து என்பதால், முந்தைய நாள் இரவு தொடங்கி திருக்கல்யாணத்தன்று மாலை வரையில் தொடர்ந்து பல வகை உணவுகள் பரிமாறப்படும்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, சித்திரைத் திருவிழா, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் திருக்கல்யாண விருந்தை நடத்துகிற பழமுதிர்ச் சோலை திருவருள் முருகன் பக்த சபை இம்முறை கரோனா நிவாரணப் பணிக்காக சமைக்க அனுமதி கேட்டது.

மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று முதல் சேதுபதி பள்ளியில் உணவு வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. உணவு வழங்கும் பணியின் தொடக்க விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பழமுதிர்ச் சோலை திருவருள் முருகன் பக்த சபை நிர்வாகிகள் சாமுண்டி, விவேகானந்தன், சேதுபதி பள்ளி செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"தினமும் 2 ஆயிரம் பேருக்கு இட்லி, தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவை பொட்டலமிடப்பட்டு வழங்கப்படும். உணவு பெறுவோர் இங்கு அமர்ந்து உணவு சாப்பிட அனுமதியில்லை. சமூக இடைவெளிவிட்டு வந்து உணவைப் பெற்றுச் செல்லலாம். திருக்கல்யாண விருந்துக்கு உபயமாக அரிசி, பருப்பு போன்றவற்றை வழங்குவது போலவே இந்த நிகழ்வுக்கும் பக்தர்கள் மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வழங்கலாம்" என்று முருகன் பக்த சபையினர் அறிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in