Last Updated : 17 Apr, 2020 06:08 PM

 

Published : 17 Apr 2020 06:08 PM
Last Updated : 17 Apr 2020 06:08 PM

பிளேக் நோயாளியை எப்படி குணப்படுத்தினார் காந்தி? 

மகாராஷ்டிர மாநிலம் உருளிகாஞ்சன் கிராமத்தில் ஒரு மருத்துவமனை. மருத்துவருக்கான ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு நோயாளிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தவர் நம்முடைய காந்திஜி. ராஜூ என்ற நோயாளியைப் பரிசோதித்துவிட்டு, மருந்துச் சீட்டில் இப்படி எழுதினார் காந்தி.

"சூரிய ஒளிக்குளியல், இடுப்புக் குளியல் மற்றும் ஒத்தடம். பழரசம், தண்ணீர் கலந்த மோர் சாப்பிடவும். பால் கூடாது. மோர் செரிக்கவில்லை என்றால் மேலும் பழரசமும், கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரும் கொடுக்கவும்".

அலோபதி மருத்துவர்களைச் சாத்தானின் சீடர்கள் என்று சொன்ன காந்தியை ஆயுர்வேதமும், ஹோமியோபதியும் கூட முழுமையாக ஈர்க்கவில்லை. நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, சூரியகுளியல், உபவாசம், சில பச்சிலைகள், காய்கறிகள் என்று ஒரு இயற்கை மருத்துவராகவே வலம் வந்தார் காந்தி. சில பரிசோதனைகளைத் தன் மீதே செய்து கொண்டார் காந்திஜி. பிறகு தன் மனைவி, மகன்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டதன் விளைவே, மேலே கண்ட மருந்துச் சீட்டு. இப்படி மருந்துச் சீட்டு எழுதிக்கொடுத்தபோது காந்தியின் வயது 77.

இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக். ஆரம்பத்தில் மருத்துவம் படிக்க விரும்பியவர் காந்திஜி. தனது இளம் வயதிலேயே தந்தையார் உடல்நலமின்றி இறந்ததும், அவருக்குச் சகல பணிவிடைகளையும் செய்த அனுபவமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ராஜ்கோட்டில் உள்ள அல்ஃப்ரெட் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேறிய காந்திஜியை, பட்டப் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பத் திட்டமிட்டார்கள் அவரது பெரியப்பாவும், அண்ணனும். நான் மருத்துவம் படிக்க விரும்புகிறேன் என்றார் காந்தி. சூரு வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர், பிராணிகளின் உடலை அறுத்து ஆராய்ச்சி செய்யும் படிப்பைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

வழக்கறிஞர் பணிக்காகச் சென்ற அவர், தென்னாப்பிரிக்காவில் கூலிகளுக்கான (அரைகுறை) டாக்டராக இருந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் அவரது சிகிச்சை முறைகள், எந்த சிகிச்சை முறைக்கும், மருத்துவ நூலுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்தது. இருப்பினும் அவரது சிகிச்சை முறைகளில் சிலவற்றை வைத்தியர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

இருந்தாலும், பிளாக் பிளேக் நோயாளிகளை அவர் காப்பாற்றிய விதம்தான் இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தென்னாப்பிரிக்காவில் அவர் இருந்தபோது, அங்கிருந்த இந்தியக் கூலிகளுக்கு சேரிபோல ஓரிடத்தை ஒதுக்கியிருந்தது ஜோகன்ஸ்பெர்க் நகராட்சி. திடீரென அப்பகுதியில் கறுப்பு பிளேக் நோய் பரவியது. 23 பேர் பாதிக்கப்பட்டார்கள். அப்பகுதியில் பூட்டிக்கிடந்த ஒரு வீட்டின் கதவை உடைத்து, சுத்தம் செய்து அதையே மருத்துவமனையாக மாற்றினார்கள் காந்தியும் அவரது தோழர்களும்.

இதுபற்றி காந்தி நகராட்சிக்கு கடிதம் எழுதியதும், டாக்டர் வில்லியம் காட்பிரே உதவிக்கு வந்தார். 23 நோயாளிகளை ஒரே மருத்துவரால் பார்த்துக்கொள்ள முடியாது என்று, திருமணமாகாத ஆரோக்கியமான சில இளைஞர்களுடன் காந்தியும் செவிலிப் பணி செய்தார். நேரத்துக்கு மருந்து கொடுப்பது, நோயாளிகளின் தேவைகளைக் கவனிப்பது, அவர்களது படுக்கைகளைச் சுத்தப்படுத்துவது, நோயாளிகளை உற்சாகமாகப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்தார்கள். மறுநாள் நகராட்சி சார்பில் கொஞ்சம் பெரிய இடத்தை, ஒரு கிட்டங்கியை காந்தியிடம் கொடுத்தார்கள். அந்த இடத்தைச் சுத்தம் செய்து, தர்ம சிந்தனையுள்ள இந்தியரின் உதவியுடன் படுக்கை உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொண்டு நோயாளிகளை அழைத்துப் போனார் காந்தி. அவர்களுக்கு உதவியாக ஒரு தாதியை அனுப்பியது நகராட்சி.

"அந்த தாதி மருந்துப் பொருட்களுடன், பிராந்தியும் கொண்டுவந்தார். நோயாளிகளுக்கு அடிக்கடி பிராந்தி கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நோய்த்தடுப்பு முறையாக தாதியும் அடிக்கடி பிராந்தி சாப்பிட்டார். அதேபோல எங்களையும் சாப்பிடச் சொன்னார். ஆனால், எங்களில் யாரும் அதைத் தொடவில்லை. நோயாளிகளுக்கும்கூட அது பலன் தராது என்றே நாங்கள் கருதினோம். பிராந்தி சாப்பிடாமல் இருக்கத் தயாராக இருந்த மூன்று நோயாளிகளுக்கு டாக்டர் காட்பிரேயின் அனுமதியுடன் மண் சிகிச்சை அளித்து வந்தேன்.

அவர்களது தலைக்கும், மார்புக்கும் ஈரமண் வைத்துக் கட்டினேன். அவர்களில் இருவர் பிழைத்துக் கொண்டார்கள். மற்ற 21 பேரும் இறந்துவிட்டனர். சில தினங்களில் அந்தத் தாதியும் கூட நோய்த்தொற்றால் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டோம். நோயாளிகளில் அந்த இருவர் மாத்திரம் எப்படிப் பிழத்தார்கள், எங்களுக்கு மாத்திரம் எப்படி நோய் பரவாமல் இருந்தது என்பதை விளக்குவது சாத்தியமில்லை. ஆனால், இந்த அனுபவம் மண் சிகிச்சை மீது எனக்கிருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது" என்று தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் காந்தி.

பிறகு அவரது முயற்சியால் அந்த ஒதுங்கல் பகுதியில் இருந்த மக்கள் எல்லாம் மாற்று இடத்துக்கு கொண்டுபோகப்பட்டார்கள். "நோய் பரவுவதைத் தடுக்க அந்த குடியிருப்புகளை எல்லாம் தீவைத்து எரித்துவிட்டது நகராட்சி. இதனால் நகராட்சிக்கு வீண் செலவு என்றாலும், மேற்கொண்டு நோய் பரவாமல் தடுத்துவிட்டார்கள்" என்றும் எழுதியிருக்கிறார் காந்தி.

இதை எல்லாம் படித்துவிட்டு காந்தியின் சிகிச்சையை அப்படியே பின்பற்றினால் என்ன என்று சிலருக்குத் தோன்றலாம். எனவே, ஒரு பின்குறிப்பு. அலோபதியை ஒரேயடியாக காந்தி புறக்கணித்துவிட்டார் என்று சொல்ல முடியாது. சிறையில் இருந்தபோது கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட காந்திஜி, அப்பென்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சேவா கிராமத்தில் காலரா பரவியபோது, ஆசிரமவாசிகளையும், கிராம மக்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்தார்.

சில நேரங்களில் அவரது இயற்கை மருத்துவம் தொல்லையிலும் முடிந்துபோயிருக்கிறது. எல்லைக் காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கானுக்கு தலையில் பிரச்சினை. அதற்கு காந்தி பரிந்துரைத்த சிகிச்சை, நோயை விட மோசமான தொந்தரவைக் கொடுத்துவிட்டது.

வல்லபாய் படேலின் காலில் முள் குத்தியதை அறிந்த காந்தி, அயோடினுக்குப் பதிலாக ஒரு கொட்டையை அரைத்துத் தடவினார். "பாபுஜி, நீங்கள் அளித்துள்ள சிகிச்சையைக் காட்டிலும் தைத்த முள்ளின் உபத்திரம் ரொம்ப ரொம்பக் குறைவு" என்று வேடிக்கையாகச் சொன்னார்.

கீரைகளையும், காய்கறிகளையும் பச்சையாகச் சாப்பிட ஆரம்பித்த காலத்தில், காந்தியின் சகா ஒருவர் சொன்னார்: "நல்லவேளை புற்களில் சத்தும், வைட்டமின்களும் இருப்பதைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள். முன்பே கண்டுபிடித்திருந்தால் ஆசிரமத்தின் சமையலறையை மூடிவிட்டு, நம்மை எல்லாம் புல் மேயச் சொல்லியிருப்பார் மகாத்மா" என்று. காந்தியும் அதைக் கேட்டுச் சிரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x