

ஓசூர் சிப்காட் - 1 தொழிற்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்காகச் சிகிச்சை அளிக்கும் வகையில் 50 படுக்கைகள் வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் புதியதாக உருவாக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இங்குள்ள தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ரூ.1.50 கோடி நிதியில் ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஐசியூ, வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் 50 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் ஓசூர் சிப்காட்டில் உள்ள வெக்டர் கட்டுப்பாட்டு மையம் ஆகிய இரண்டு இடங்களில் கரோனா வைரஸ் ரத்த மாதிரிகள் பரிசோதனை மையம் இன்னும் இரண்டு நாட்களில் செயல்பட இருக்கிறது.
இனி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தேகிக்கக்கூடிய நபர்களின் ரத்த மாதிரிகளை இங்கேயே பரிசோதித்துக் கொள்ள முடியும். மாவட்டத்தில் ஓசூர் உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை. மாவட்டத்தில் 410 பேரின் ரத்த மாதிரிகளை அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுக்கு உட்படுத்தியதில் 265 பேருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 145 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் விரைவில் தெரியவரும்.
மாவட்டத்தில் அரசின் கட்டுப்பாட்டில் வீட்டுக் காவலில் இருப்போரின் எண்ணிக்கை 3,035 ஆகும். 28 நாட்கள் வீட்டுக்காவல் முடிந்தவர்களின் எண்ணிக்கை 607. தமிழக அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து கரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக விளங்க பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து வீடுகளில் இருந்து ஒத்துழைக்க வேண்டும்''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறினார்.
இந்த ஆய்வின்போது இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை மருத்துவர் கீதா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.