

ஊரடங்கால் வாழ்வாதார பாதிப்பை சந்தித்துள்ள பொது காப்பீடு முகவர்களுக்கு 3 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய பொதுக்காப்பீடு முகவர்கள் சங்க தமிழ் மாநில அமைப்புச் செயலர் எஸ்.சுரேஷ் விஷ்வர், மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வாகன காப்பீடு, தனி நபர் விபத்து காப்பீடு, தீ மற்றும் திருட்டு காப்பீடு, மருத்துவக் காப்பீடு, கடல் மற்றும் வான்வழியில் அனுப்பப்படும் ஏற்றுமதி பொருட்களுக்கான காப்பீடு என பல்வேறு இடர் காக்கும் பணிகளில் முகவர்களின் பங்கு மகத்தானது.
இந்தியாவில் நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா, நேஷ்னல் மற்றும் ஒரியண்டல் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான முகவர்கள் உள்ளனர்கள். இந்த முகவர்களுக்கு கமிஷன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
கரோனா ஊரடங்கு காரணமாக முகவர்கள் வீட்டை விட்ட வெளியே செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களை சந்திப்பது புதிய பாலிசி எடுப்பது, புதுப்பித்தல், பிரிமீயம் பணம் செலுத்துதல் ஆகிய பணிகள் தடைபட்டுள்ளன. இதனால் பொதுகாப்பீடு முகவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரை 3 மாதங்களுக்கு பொது காப்பீடு முகவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.