பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: 7 வார்டுகளில் அதிமுக போட்டி - ஜெயலலிதா அறிவிப்பு
பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 7 வார்டுகளில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, கர்நாடக மாநிலத்தில் வரும் 22-ம் தேதியன்று நடைபெற உள்ள பெங்களூரு பெரு மாநகராட்சித் தேர்தலில், 7 வார்டுகளில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்.
இதன்படி, 96–வது வார்டுக்கு (ஒகலிபுரம்) கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் சுப்பிரமணி, 120–வது வார்டுக்கு (காட்டன்பேட்) கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, 95-வது வார்டுக்கு (சுபாஷ் நகர்) பெங்களூரு மாவட்டச் செயலாளர் குமார், 80-வது வார்டுக்கு (ஒய்சால நகர்) அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் சிம்சன் சண்முகம், 48–வது வார்டுக்கு (முனீஸ்வரா நகர்) துளசி அன்பரசன், 60–வது வார்டுக்கு (சகாயபுரம்) சகாயராஜ், 170–வது வார்டுக்கு (ஜெயா நகர்) முருகேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
