

விளாத்திகுளத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மகப்பேறு, குழந்தை மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் அளிக்க மறுப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லவும் மற்றும் மருத்துவ சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விளாத்திகுளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஊரடங்கு உத்தரவை காரணமாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்கள் சூழ்ந்த விளாத்திகுளம் தொகுதி மக்கள் செய்வதறியாது உள்ளனர்.
கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள், மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் தடைபட்டுள்ளன. இதர பொது மருத்துவ சேவைகளுக்கும் கூட சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு ஊருக்கு வெளியேயும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இதனால் வேறு ஊர்களுக்கு செல்லக்கூட முடியாத நிலை நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் நகர செயலாளர் பாலமுருகன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் எந்தவித மருத்துவமும் பார்ப்பதில்லை.
ஏற்கெனவே, சிகிச்சை பெற்றவர்களாக இருந்தால், முன்பு வழங்கிய மருத்துவ சீட்டை வைத்து, அதே மருந்துகளை உட்கொள்ள சொல்லி நோயாளிகளை அறிவுறுத்துகின்றனர். சிறிய பிரச்சினைகளுக்கு கூட மருத்துவம் பார்ப்பதில்லை. இது தான் நிதர்சனம், என்றார் அவர்.
இதுகுறித்து சுகாதார துறை துணை இயக்குநர் அனிதா மோகன்தாஸ் கூறுகையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
விளாத்திகுளம், புதூர் பகுதியில் மூடப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். தகுந்த காரணங்கள் இன்றி மூடப்பட்டுள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தடையின்றி மருத்துவ சேவை அளிக்க ஆவண செய்யப்படும், என்றார்.