

தமிழகத்தில் கரோனா தொற்றால் ஊரே முடங்கியுள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகள் நிலை மோசமான நிலையில் உள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 70 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர். ரூ.5000 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் தீபக் முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது:
''பல மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து எங்களை அழைத்து உணவு மற்றும் உதவிகள் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். எத்தனை மாற்றுத்திறன் மக்களுக்கு எங்களால் உதவிகளைப் பெற்றுத்தர முடியும். தங்கள் அரசு அறிவித்த உதவி எண்ணில் ஒருமுறை உதவி பெறுவதற்கே பெரும் சிரமமாக உள்ளது.
அப்படியே உதவி கிடைத்தாலும், சொற்பமாகவே இருக்கிறது. இருப்பினும் 70,000 பேர் உதவியை நாடியுள்ளதாக, மாற்றுத்திறனாளிகள் ஆணையர் தெரிவித்துள்ளார். அப்படியானால் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகள் சிரமத்தில் உள்ளது ஊர்ஜிதமாகிறது.
மத்திய அரசு அறிவித்த உதவி எப்படி கிடைக்கும் என்று தெரியவில்லை. எங்களுக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு) இருக்கும் உடலியல் பிரச்சினைகளை சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். வறுமையும், ஊனமும் ஒரு சேரவே இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தியுள்ளன. ஊனமில்லாதவர்களுக்கே பல சிரமங்கள் என்றால் எங்களுக்கு எத்தனை சிரமம் இருக்குமென்பதை எண்ணிப்பாருங்கள்.
அரசு எங்களைப் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5000 வாழ்வாதார உதவித்தொகையை உடனடியாக அளிக்க வேண்டும். இந்த வேண்டுகோளை அரசு ஏதோ குரலற்ற சமூகம் கேட்பதாய் கருதி அமைதி காக்கக் கூடாது.
அனைவருக்கும் உதவி பெற்றுத் தருவது எந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கும் சிரமம்தான். இதைப் புரிந்து கொண்டு அரசு உடனடியாக இந்த சிரம காலத்தைத் தாண்டி வருவதற்கு உதவித்தொகையை ரூபாய் 5000 ஆக அறிவிக்க வேண்டும். வார்த்தைகள் என்று கடந்து போகாதீர்கள், வலி என்று புரிந்து கொள்ளுங்கள்”.
இவ்வாறு பேராசிரியர் தீபக் தெரிவித்துள்ளார்.