

அரசுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துணையாக இருங்கள் என, எதிர்க்கட்சியினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலத்தில் இன்று (ஏப்.17) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக அரசின் நடவடிக்கைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "நாங்கள் அவரைப் பொருட்படுத்துவது கிடையாது. அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். உயிரோடு விளையாடுவது சரியல்ல. எதிர்க்கட்சித் தலைவர் என்றால் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
தினந்தோறும் அறிக்கை விடுவது, குற்றம் சொல்வது என்றிருக்கிறார். ஒட்டுமொத்த அரசு எந்திரமே செயல்படுகிறது. அனைத்து அரசு அதிகாரிகளும் இரவு, பகல் பாராமல் தன் குடும்பத்தை விட்டு, உயிரைத் துச்சமென நினைத்து மக்களுக்காகப் பணியாற்றும் இந்த வேளையில் குற்றம் சொல்கின்ற நேரமா இது? உயிரைக் காக்க வேண்டிய நேரம்.
அதைக் காப்பதற்கு வழிமுறை சொன்னால் நல்லது. அதை விடுத்து குறை சொல்வது பொருத்தமாக இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன ஆலோசனை கூறினர்? அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மருத்துவர்களா? இதில் ஆலோசனை சொல்ல வேண்டியவர்கள் மருத்துவர்கள். அரசியல்வாதிகள் என்ன பேச முடியும்?
இது முழுக்க முழுக்க மருத்துவத் துறை சார்ந்த பணி. மருத்துவ வல்லுநர்கள் குழு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார மையம் சொல்வதை அரசு பின்பற்றுகிறது. இதில், என்ன தவறு? வேண்டுமென்றே தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும், அரசியலாக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், அது நடக்காது.
எங்களுக்கு மக்கள் பணி செய்ய வேண்டும். பணி செய்யும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நோயாளிகள் விரைந்து குணமடைவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
இனி, எதிர்கட்சியினர் சொல்வதை நாங்கள் எடுத்துக்கொள்ளவே மாட்டோம். எங்களுக்கு மக்கள்தான் முக்கியம். மக்களின் உயிர் தான் முக்கியம். இதில் அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது.
அரசுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துணையாக இருங்கள் என, எதிர்க்கட்சிகளை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.