

ஒரு லோடு மணல் 30 முதல் 50 ஆயிரம் வரையில் விற்கப்படுவதால், ஊரடங்கைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.
தமிழகத்தின் இயற்கை வளக்கொள்ளையில் மிக முக்கியமானது ஆற்று மணல் கொள்ளை. மிக மிக அதிக லாபம் இருப்பதால், மணல் அள்ளுவதைத் தடுக்கும் காவல் மற்றும் வருவாய்த்துறையினரைக் கொலை செய்யக்கூட தயங்குவதில்லை மணல் கொள்ளையர்கள்.
ஊரடங்கு நேரத்தில் ஆற்றுப்பகுதியில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை கண்காணிப்பு குறைந்துள்ளதைப் பயன்படுத்தி, மீண்டும் மணல் கொள்ளையைத் தொடங்கியிருக்கிறார்கள் சிலர். சரக்கு வாகனங்களுக்குத் தடை கிடையாது என்பதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவர்கள். அதில் ஓரிருவர் மட்டுமே சிக்கியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் மணிமுத்தாறு படுகையில் மணல் அள்ளிய டிராக்டரை வழிமறித்த போலீஸ்காரர் சதீஷ் (32) கொலை வெறித்தாக்குதலுக்கு ஆளானார். 4 நாட்களுக்கு முன்பு, மதுரை மாவட்டம் கீழவளவு அருகே கண்மாயில் மண் அள்ளிய டிப்பர் லாரியும், பேரையூர் அருகே ஜம்பலப்புரம் ஊரணியில் மணல் அள்ளிய 2 டிப்பர் லாரிகளும் பிடிபட்டன.
மதுரை கோச்சடை பகுதியில் வைகை ஆற்றில் மணல் அள்ளப்படுவது குறித்து தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் சிவமுத்துக்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதிலும் மணல் கொள்ளை குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன என்கிறார் குடிநீர் வடிகால் வாரிய ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில நிர்வாகியான கே.கே.என்.ராஜன்.
"தமிழகத்தில் 2003 முதல் இதுவரையில் விலை உயராத ஒரே பொருள் மணல்தான். 2 யூனிட் மணலுக்கு அரசு நிர்ணயித்த விலை (வரி உள்பட) 1,050 ரூபாய் மட்டுமே என்ற நிலை 16 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை. மக்களுக்கு இரண்டரை யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் 25 ஆயிரத்துக்குக் குறைந்து கிடைப்பதில்லை. மதுரையில் ரூ.30 ஆயிரத்துக்கும், நெல்லை, குமரியில் அதே மணல் ரூ.40 முதல் 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தென்மாவட்டங்களில் அரசு மணல் குவாரி எதுவும் இல்லாததால், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி ஆங்காங்கே மணல் கொள்ளை தொடங்கிவிட்டது.
தாமிரபரணி, வைகை மட்டுமின்றி சிற்றாறு, குண்டாறு போன்ற சின்னஞ்சிறு ஆறுகளில் கூட மணல் அள்ளத் தொடங்கிவிட்டார்கள். இதேநிலைதான் வட மாவட்டங்களிலும் நிலவுகிறது. நாகை மாவட்டம் பாண்டவையாற்றிலும் கூட மணல் திருட்டு நடப்பதாக புகார் வந்துள்ளது. இப்படி மணல் அள்ளுபவர்களில் பலர் அருகில் உள்ள கிராமங்களிலேயே பதுக்கி வைத்திருக்கிறார்கள். 20-ம் தேதிக்குப் பிறகு கட்டிட பணிகளைத் தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், மணல் கொள்ளை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழத்தின் குடிநீர்த்திட்ட கிணறுகளும் எல்லாமே பெரும்பாலும் ஆற்றுக்குள்தான் இருக்கின்றன. மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டாலும் கோடையில் குடிநீர் பிரச்சினை பூதாகரமாகிவிடும்" என்றார் ராஜன்.
நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?