Published : 17 Apr 2020 02:37 PM
Last Updated : 17 Apr 2020 02:37 PM

ஜூம் செயலி பாதுகாப்பான தளம் அல்ல: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

ஜூம் (ZOOM) செயலி தனி நபர்கள், அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் பயன்படுத்த உகந்ததல்ல என சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. அது பாதுகாப்பான தளம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ளவர்கள் கடந்த ஒரு மாத காலமாகப் பயன்படுத்திவரும் மிக முக்கிய செயலி ஜூம் (ZOOM) ஆகும். காணொலிக் கூட்டம், தனியாக சாட் செய்வது, மெசேஜ் அனுப்புவது, ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்தச் செயலி எளிதாகப் பயன்படுவதால் பலரும் இதை விரும்பி டவுன்லோடு செய்தனர்.

சென்னை காவல்துறை அதிகாரிகளே தங்களுக்குள் ஜூம் செயலி மூலம் தகவல் பரிமாறிக்கொள்வதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்தச் செயலியைப் பயன்படுத்துவது எளிதானது என்பதாலும், புதிதாக கணக்கு தொடங்க வேண்டியதில்லை என்பதாலும் கடந்த ஒரு மாதத்தில் 60 மில்லியனுக்கும் மேல் இந்தச் செயலி டவுன்லோடு செய்யப்பட்டது.

ஆனாலும் இது பாதுகாப்பானதாக இல்லை என சைபர் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்களிலிருந்து தகவல்களைத் திருட முடியும் எனக் கண்டறிந்துள்ளனர். கூகுள், டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஜூம் செயலியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஜூம் செயலிக்குத் தடை விதித்துள்ளது.

தற்போது ஜூம் செயலியைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு:

“தனிநபர்கள் ஜூம் (ZOOM) இணையவழி சந்திப்புத் தளத்தை, பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் ஒருங்கிணைப்பு மையம் (CyCord), அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அலுவலக நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய தளம் இதுவல்ல என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் ஆவணம், இந்திய கணிப்பொறி அவசரகால மறுமொழி குழு (Indian Computer Emergency Response Team(Cert-In))வெளியிட்ட முந்தைய அறிவுரைகளைக் குறிப்பிட்டிருப்பதோடு, ஜூம் (ZOOM) பாதுகாப்பான தளம் அல்ல என்றும் கூறியுள்ளது. தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக, இந்தத் தளத்தைப் பயன்படுத்த விரும்பும், தனி நபர்களுக்கு, பாதுகாப்பு அளிப்பதற்காக விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜூம் (ZOOM) மாநாட்டு அறையில் அங்கீகாரம் இல்லாத எவரும் நுழைந்து விடுவதைத் தடுப்பது, அங்கீகாரம் இல்லாமல் பங்கேற்கும் நபர், மாநாட்டைப் பயன்படுத்தும் மற்ற பங்கேற்பாளர்களின் டெர்மினல்களைப் பாதிக்கக் கூடிய செயல்களைச் செய்யாமல் தடுப்பது ஆகியவை, இந்த அறிவுரை வழங்கப்பட்டதற்கான பரந்த நோக்கமாகும்.

தனிநபர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய மேலும் விவரங்கள் குறித்து, தனியாக கொடுக்கப்பட்ட ஆவணத்தில் தெரிந்து கொள்ளலாம்”.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x