

தமிழகத்தில் கரோனா தொற்று அறியும் சோதனையை விரைவுபடுத்தும் ஸ்க்ரீனிங் டெஸ்ட்டுக்கான ரேபிட் கிட் கருவிகள் சீனாவிலிருந்து இந்தியா வந்த நிலையில், முதற்கட்டமாக 24,000 ரேபிட் கருவிகள் தமிழகம் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்றில் இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மரண சதவீதம் 1.91 ஆக உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோயுற்றவர்கள் தவிர தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு தீவிரமாகச் சோதனையிட்டு வருகிறது.
தமிழக அரசிடம் தேவையான அளவு முகக் கவசங்கள், என்.95 முகக் கவசங்கள், பிபிஇ கவச உடை, படுக்கைகள், பிசிஆர் கிட்கள் உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பரவலான சோதனை நடத்தப்பட வேண்டும், அதற்கு ரேபிட் கிட் மூலம் ஆய்வு நடத்தப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள், மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிசிஆர் கருவிகள் நோய்த்தொற்றை உறுதிப்படுத்த எடுக்கப்படும் சோதனைக் கருவி. ஆனால் ரேபிட் கிட்கள் பரவலாக அனைத்துத் தரப்பினரையும் முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தும் கருவி. இதன் மூலம் அரை மணிநேரத்தில் தொற்று உள்ளவர்கள், தொற்று சந்தேகம் உள்ளவர்களை சாதாரண பொதுமக்களிடமிருந்து வகைப்படுத்தலாம். ஆய்வுக்கான செலவும் குறைவு.
ஆனால், தமிழக அரசிடம் ரேபிட் கிட் கருவிகள் இல்லை. அதற்காக 4 லட்சம் கருவிகள் சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஏப் 10-ம் தேதி 1 லட்சம் ரேபிட் கருவிகள் வந்துவிடும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் மூலமே இவை வாங்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா இடையில் புகுந்து ரேபிட் கருவிகளை வாங்கிவிட்டது என்பதாலும் தமிழகத்துக்கு ரேபிட் கருவிகள் வரவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 24,000 ரேபிட் கருவிகள் சென்னை வந்துள்ளதாகத் தெரிகிறது.