கரோனாவால் முடங்கிய வாழ்வாதாரம்: 20-ம் தேதிக்குப் பிறகு ஸ்டூடியோக்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு புகைப்படக் கலைஞர்கள் கோரிக்கை

கரோனாவால் முடங்கிய வாழ்வாதாரம்: 20-ம் தேதிக்குப் பிறகு ஸ்டூடியோக்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு புகைப்படக் கலைஞர்கள் கோரிக்கை
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் வரும் 20ம் தேதிக்குப் பிறகு அச்சகங்கள், ஸ்டூடியோக்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு புகைப்படக் கலைஞர்கள், அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அதிகளவு அளவில் சிறிய அச்சகங்கள், ஸ்டூடியோக்கள் உள்ளன. அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர்.

‘கரோனா’ ஊரடங்கால் கடந்த 25 நாளாக இவர்கள் அச்சகங்களையும், ஸ்டூடியோக்களை அடைத்துவிட்டனர். அதனால், வாழ்வாதாரம் இல்லாமல் வங்கி கடனை அடைக்க முடியாமலும், அன்றாட வாழ்வாதாரத்திற்கு பணம் இல்லாமலலும் திண்டாடுகின்றனர்.

அதனால், தமிழக அரசு ஊரடங்கு காலத்திற்கான நிவாரணத்தை மற்ற துறை தொழிலாளர்களைப் போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், 20-ம் தேதிக்கு எங்கள் தொழிலையும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை ஒய்.ஒத்தக்கடை நரசிங்கம் ரோடு ஸ்டூடியோ உரிமையாளர் பி.சுரேஷ் கூறுகையில், "கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு எடுக்கும் அசாதாரண நிலையில் பாதிக்கப்படுவோரில் நாங்களும் ஓர் அங்கம்.

இந்த காலத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நடப்பதில்லை. திருவிழா ஆர்டர்களும் வருவதில்லை. அதனால், புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

வருமானம் இல்லாமல் எங்கள் தொழிலாளர்கள் மீள முடியாத வறுமைக்கு இலக்காகியுள்ளோம். வரும் 20-ம் தேதி முதல் சிறு தொழில்கள் செயல்படுவதற்கு பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார்.

அதனால், இந்தப் பட்டியலில் எங்கள் தொழிலையும் சேர்த்து செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அரசு கடைபிடிக்க அறிவுறுத்தும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து மக்கள் ஒரிருவருக்கு மேல் கூடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in