Published : 17 Apr 2020 12:44 PM
Last Updated : 17 Apr 2020 12:44 PM

கரோனா தொற்று: சென்னையில் ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் கரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 பேரில் 30 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மார்ச் மாத ஆரம்பத்தில் ஒற்றைப்பட இலக்கத்தில் இருந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நாட்களில் இரட்டைப்படையாக உயர்ந்த நிலையில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கடகடவென உயர்ந்தது.

பின்னர் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் கடுமையாக உயர்ந்ததால் தமிழகம் 10-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கரோனா நோய்த் தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.

நோய்த்தொற்றால் பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமும் நிகழ்ந்தது. ஆனால் அது சதவிகித அளவில் மிகக்குறைவாக 1.91 என்கிற அளவில் இருந்தது ஆறுதலான விஷயம். அதே நேரம் நோய்த்தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்தவர்களும் உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஆரம்பத்தில் ஓரிரண்டு பேர் டிஸ்சார்ஜ் என்கிற நிலையைத் தாண்டி 10 பேர், 20 பேர் என டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் அதிகபட்சமாக 217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர தொற்றுள்ளவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானவர்கள் அரசு மருத்துவமனையிலும், ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 1, 5, 8, ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. இதில் ஓமந்தூரார் மருத்துவமனையில் 90க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று இருக்கலாம் என தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர், இந்நிலையில் அவ்வாறு 90-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அவர்களை மருத்துவமனை டீன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். அவர்களை மேலும் சில வாரங்கள் அரசு கண்காணிக்கும். அவர்கள் 14 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீடுகளில் தனிமையில் இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x