Published : 17 Apr 2020 11:01 AM
Last Updated : 17 Apr 2020 11:01 AM

கரோனா தீவிர பாதிப்பு: தமிழகத்தை மீட்கும் சவாலை சாதிப்பது இளைஞர்கள் கைகளில் தான் உள்ளது; ராமதாஸ்

கரோனா தீவிர பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்கும் சவாலை சாதிப்பது இளைஞர்கள் கைகளில் தான் உள்ளது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.17) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. நோய்ப்பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும், தமிழ்நாட்டில் இந்த நிலையை மாற்றுவது நமக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

இந்தியாவில் 170 மாவட்டங்களை கரோனா பாதிப்பு தீவிரமுள்ள சிவப்பு ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய சுகாதாரத்துறை வகைப்படுத்தியிருக்கிறது. கரோனா வைரஸ் பரவல் அதிக வேகத்தில் நிகழும் மாவட்டங்கள் என்ற அடிப்படையில் 123 மாவட்டங்களும், கொத்துக்கொத்தாக கரோனா வைரஸ் நோய் தாக்கிய பகுதிகள் என்ற அடிப்படையில் 47 மாவட்டங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருவாரூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய 22 மாவட்டங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.

கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களும், இரண்டாவது இடத்திலுள்ள டெல்லியில் 10 மாவட்டங்களும் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை விட இரு மடங்கு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் இதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை.

நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் அதிக மாவட்டங்கள் இருப்பது இந்த நிலைக்கு முக்கிய காரணமாகும். அதேநேரத்தில், தீவிர கரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களை இயல்பு நிலை மாவட்டங்களாக மாற்ற வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு உண்டு. அதை சாதிப்பது தான் மாநில அரசுகளின் திறமைக்கும், பொதுமக்களின் ஒத்துழைப்புக்கும் சான்றாக அமையும்.

தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை என்றால் அவை இயல்பு நிலை மாவட்டங்களாக, அதாவது ஆரஞ்ச் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக மாற்றி வகைப்படுத்தப்படும். மேலும், 14 நாட்களுக்கு எந்த புதிய தொற்றும் ஏற்படவில்லை என்றால் அவை கரோனா பாதிப்பு இல்லாத, பச்சை மாவட்டங்களாக மாற்றப்படும்.

சிவப்பு ஹாட்ஸ்பாட் மண்டலத்தில் இருக்கும் 22 மாவட்டங்களையும் அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது தான் தமிழக அரசின் முன்பும், தமிழ்நாட்டு மக்களின் முன்பும் இப்போதுள்ள முக்கியக் கடமையாகும்; இது பெரும் சவாலுமாகும்.

இந்த சவாலை சாதனையாக மாற்றுவதில் அரசை விட பொதுமக்களுக்கு தான் பெரும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் சராசரியாக 90 முதல் 100 வரை புதிய தொற்றுகள் ஏற்பட்ட காலம் மாறி, கடந்த 3 நாட்களாக புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கிட்டத்தட்ட ஆய்வுகள் செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் எவருக்கும் புதிய தொற்று ஏற்பட்டு விடாமல் தடுத்தாலே கரோனா தடுப்பு சாதனையை படைத்துவிட முடியும்.

இதற்காக நாம் செய்ய வேண்டிய பணி மிகவும் எளிதானது தான். அது ஏற்கெனவே கடந்த பல வாரங்களாக நான் கூறி வருவதைப் போன்று இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேவையின்றி வெளியில் சுற்றாமல், ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும் என்பது தான்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய கரோனா பரவல் குறித்த கணக்கீட்டை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளும். அதன்படி கடந்த திங்கட்கிழமையிலிருந்து நேற்று வரையிலான 4 நாட்களில் திருச்சி மட்டும் தான் புதிய தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. மீதமுள்ள 21 தீவிர பாதிப்பு மாவட்டங்களிலும் ஏதேனும் ஒரு நாளில் இல்லாவிட்டாலும் இன்னொரு நாளில் புதிய கரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் கூட இன்று முதல் புதிய தொற்றுகள் ஏற்படுவதைத் தடுத்தால் அடுத்த 14 நாட்களில் இந்த மாவட்டங்களை தீவிர பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து விட முடியும். எனவே, மீண்டும், மீண்டும் நான் கேட்டுக் கொள்கிறேன்... இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்பதைத் தான்.

இனி வரும் நாட்களில் ஊரடங்கை மிகத்தீவிரமாக கடைபிடித்து தமிழ்நாட்டை வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x