

விழுப்புரம் மாவட்டத்தில் நாளிதழ் வாகனத்தை சேதப்படுத்தி, விநியோகத்தைத் தடுத்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விநியோகம் செய்ய நாளிதழ்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தினாலும் நாளிதழ் விநியோகத்திற்கு தடை இல்லை என அரசு அறிவித்துள்ளது.
ஆனாலும், இதனை பொருட்படுத்தாமல் ஆரோவில், கிளியனூர், செஞ்சி காவல்துறையினர் நாளிதழ் விநியோகம் செய்ய அதிகாலை செல்லும் மினிவேன்கள் மற்றும் நாளிதழ் விநியோகம் செய்பவர்களை காவல்துறையினர் தாக்கி வருவதாக எஸ்.பி. ஜெயகுமாரிடம் தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. காவல்துறை சார்பில் நாளிதழ் விநியோகம் செய்வதை தடை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்.17) திண்டிவனம் அருகே தென் கோடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள தற்காலிக சோதனைச்சாவடியில் இருந்த போலீஸார் அதிகாலை நாளிதழ் விநியோகம் செய்ய மினிவேனை சேதபடுத்தி, ஓட்டுநரை தாக்கியதாக எஸ்.பி. ஜெயகுமாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கிளியனூர் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர்கள் சுதாகர், சரவணன் ஆகியோரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. ஜெயகுமார் உத்தரவிட்டுள்ளார்.