

வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கண்டறிய விழுப்புரம் போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்தும், சுவரை துளையிட்டும் மதுபாட்டில்கள் திருடப்பட்டன.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுவகைகள் கிடங்குகளுக்கு மாற்றப்பட்டது. மேலும், கள்ளச்சந்தையில் மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் கைதும் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்பட்டதால் மது கிடைக்காமல் வார்னிஷ், ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்டடோர் இறந்தனர்.
இந்நிலையில், வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவது எப்படி என்ற வீடியோக்கள் யூ டியூப்பில் வைரலாகி வருகின்றன.
இதையடுத்து, குடியிருப்புப் பகுதியில் திறந்துள்ள மளிகைக் கடைகளில் சாராயம் காய்ச்ச தேவையான முக்கிய பொருளான நவச்சாரம் வாங்க வருபவர்களுக்கு அதை விற்பனை செய்யக் கூடாது என்றும் அப்படி வாங்க வருபவர்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இணையத்தில் இது தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.