

சேலத்தில் கரோனா தொற்று பரவலுக்கு காரணமாக இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்து, சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலத்தில் கடந்த மார்ச் மாதம் மதபிரசங்கம் செய்ய வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருடன் சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 16 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
கரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்ததாக இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேர் மீது சேலம் கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் 16 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கைது செய்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேரும் குணமடைந்தனர். இதையடுத்து, 16 பேரையும் போலீஸார் நேற்று சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
சேலம் ரெட் அலர்ட் பகுதி
சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் அரசு மருத்துவமனை யில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
சேலம் மாவட்டம் ரெட் அலர்ட் பகுதியாக உள்ளதால் தற்போது உள்ள விதிமுறைகள் அமலில் இருக்கும். இதுவரை 1300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 373 பேருக்கு ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. முடிவு இன்னும் வரவில்லை, என்று தெரிவித்துள்ளார்.