Published : 17 Apr 2020 06:55 AM
Last Updated : 17 Apr 2020 06:55 AM

கரோனா பரவலை தடுக்க, அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு அமைத்த குழுக்களின் பணிகளும், தகவல் பரிமாற்றமும்- தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்து செயல்படும் அதிகாரிகள்

சென்னை

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு அமைத்துள்ள குழுக்கள் தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் ‘டாஸ்க் போர்ஸ்’ என்ற குழு பல்வேறு துறைகளின் செயலர்கள் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களை 12 மண்டலங்களாகப் பிரித்து 12 மண்டல சிறப்பு பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான வழிமுறைகளை சர்வதேச ஆய்வுகளின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை கொடுக்க 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவும் செயல்பட்டு வருகிறது.

இதில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட 12 குழுக்கள் மிக முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.மத்திய, மாநில அரசுகளுக் கிடையே ஒருங்கிணைப்பு, மத்தியஅரசிடம் இருந்து நிதி, மருத்துவ உபகரணங்கள் பெறுதல்,வெளிநாடுகளில், வெளிமாநிலங் களில் தங்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவுதல் ஆகியவற்றுக்காக ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது.

தொற்று எப்படி ஏற்பட்டது, அவர் எங்கிருந்து வந்தார், அவர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்பவை குறித்து ஆய்வு செய்கிறது ‘நோய் தொற்று கண்காணித்தல் மற்றும் தனியார் சுகாதாரப் பணிகள் ஒருங்கிணைப்பு குழு’. அதேபோல், முதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களைக் கண்டறிந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கும்பணிகளை ‘நோய் தொற்றாளர்களு டன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சரக்கு மேலாண்மை குழு’ மேற்கொண்டு வருகிறது.

‘சுகாதார உட்கட்டமைப்புகள் மற்றும் நோய் கிருமிகளை நீக்கும்நடவடிக்கைகளை ஒருங்கிணைக் கும் குழு’ மருத்துவமனைகள், சந்தைகள், அரசு கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துகிறது. கரோனா வைரஸ் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் போதியஅளவில் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் ஏற்படுத்துதல், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை சிகிச்சைக்காக முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கிறது ‘சுகாதார உட்கட்டமைப்புக் குழு’.

மேலும், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மருத்துவம் சார்ந்த மற்றும் அத்தியாவசிய பொருட்களைத் தயாரித்தல், அவற்றை மாநிலத்துக்குள்ளும், வேறு மாநிலத்தில் இருந்தும் நகர்வு செய்தல் போன்ற பணிகளை ‘அத்தியாவசிய பொருட்கள்உற்பத்தி நகர்வு ஒருங்கிணைப்பு குழு’ மேற்கொள்கிறது. தமிழகஅரசின் நிவாரணம் மற்றும் இலவச பொருட்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தல், மாநிலம்,மாவட்ட அளவில் விவசாய விளைபொருட்கள் அறுவடை, வணிகம்செய்தல் அவற்றின் போக்குவரத்து,மளிகை பொருட்கள் இதர மாநிலங்களில் இருந்து கொண்டுவருவதற் கான அனுமதிகள் பெற்றுத் தருதல் போன்ற பணிகளை ‘அத்தியாவசிய பொருட்கள் விநியோக குழு’ மேற்கொள்கிறது.

அரசின் நடவடிக்கைகள், முதல்வரின் அறிவிப்புகள், இதர குழுக்களின் நடவடிக்கைகளை பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும் பணிகளை ‘ஊடக ஒருங்கிணைப்புக் குழு’ மேற்கொள்கிறது. முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் சிறப்பு தேவையை எதிர்நோக்குவோரின் தேவைகளை கவனிக்க தனி ஒருங்கிணைப்பு குழுவும் செயல்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்பில் ஒருங்கிணைப்பு

குழுவினரின் அன்றாட செயல்பாடு குறித்து அதிகாரிகள் கூறும் போது, ‘‘ஒவ்வொரு குழுவிலும் உள்ள அதிகாரிகள் தங்களுக்குள் கைபேசி மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். தேவையான ஆவணங்கள், அனுமதிக் கடிதங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி பரிமாறப்படுகிறது. இதுதவிர 12 குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு ‘வாட்ஸ் அப்’ குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தலைமைச் செயலரும் இடம்பெற்றுள்ளார்.

எனவே, 12 குழுவினருக்குள் ஏதேனும் தகவல் பரிமாற்றங்கள் இருந்தால், அந்த வாட்ஸ் அப் குழுவில் பதிவிடுவோம். 12 குழுவினருக்குள் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களில், தலைமைச் செயலரும் தனது உத்தரவுகளை வழங்கி வருகிறார். இதுதவிர, தேவைப்படும் நேரங்களிலும், வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை அனைத்துகுழுவினரும் ஆய்வுக்கூட்டங் களை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை எடுப்போம்’’ என்றனர்.

நிதித் துறை செயலர் கிருஷ்ணனின் சீரிய பணி

ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ரூ.12 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் முதல்வர் கோரியுள்ள நிலையில் குறைந்த அளவு நிதியே விடுவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தற்போ தைய சூழலைக் கையாள நிதித் துறையை நிர்வகிக்கும் செயலரின் செயல்பாடு மிகவும் முக்கியம். தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணனைப் பொறுத்தவரை திறமையாக கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, மாநில அரசு அமைத்துள்ள 12 குழுவில் இவரும் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஏப்ரல் 20-க்குப்பின் ஊரடங்கில் தளர்வு செய்து அனுமதித்துள்ள தொழிற்சாலைகள், பல்வேறு சிறுதொழில் இயக்கத்துக்கு அனுமதியளிக்க பரிந்துரைகள் வழங்கும் குழு, நிதித் துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வருவாய், தொழிலாளர், சுகாதாரம், தொழில், சிறு குறு நடுத்தர தொழில் கள், உள்ளிட்ட 9 துறைகளின் செயலர்கள், டிஜிபி, பொது சுகாதார இயக்குநர், முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், தொற்று நோயியல் நிபுணர் குகாநந்தன், சிஐஐ, எப்ஐசிசிஐ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x