Published : 17 Apr 2020 06:36 AM
Last Updated : 17 Apr 2020 06:36 AM

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து உண்டா?

சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய புதிதில் இதற்கு மருந்து இல்லை; மாத்திரை இல்லை என்றார்கள். சமூக இடைவெளி முக்கியம்; கை கழுவுவது கட்டாயம்; ஊரடங்கில் அடங்குஎன்றார்கள். அதற்கு பிறகு, ஹைட்ராக்ஸி குளோரோகுவின் (Hydroxychloroquine) மாத்திரை கரோனாவுக்கு ஒரு ‘கேம் சேஞ்சர்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அஸித்ரோமைசின் மாத்திரையையும் அத்தோடு சேர்த்துக் கொள்ளலாம் என்றது இந்திய மருத்துவ கவுன்சில். இப்போது பிளாஸ்மா சிகிச்சை வந்திருக்கிறது என்கிறார்கள். இவை எல்லாம் என்ன? அறிவோமா?

மூன்றுவித நோயாளிகள்

வறட்டு இருமல், மூக்கில் வாசனை இல்லை, ருசி தெரியவில்லை, காய்ச்சல், தொண்டை வலி என்று வருபவர்களுக்கு RT - PCR பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என முடிவு வந்துவிட்டால், அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள். 80 சதவீதம் பேருக்கு சாதாரண காய்ச்சல் மருந்திலும் இருமல் மருந்திலும் பிரச்சினைகள் சரியாகிவிடும். 15 சதவீதம் பேருக்கு மூச்சுத் திணறல் உண்டாகும். அதைக்கட்டுப்படுத்த ஆக்ஸிஜன் செலுத்துகிறார்கள். அதில் மூச்சு விடுவதற்கு வசதி கிடைத்துவிடும். குணமாகிவிடுகிறார்கள்.

மீதி 5 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படும். இவர்களுக்குதான் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசத்துக்கு வழி செய்வதில் தொடங்கி 45-க்கும் மேற்பட்ட மாத்திரைகளையும் மருந்துகளையும் சோதனை முறையில்கொடுத்துப் பார்க்கின்றனர் மருத்துவர்கள்.

இவற்றில் முக்கியமானவை இவை:

ஹைட்ராக்ஸி குளோரோகுவின்

இப்போது ஊடகங்களில் அதிகம்பேசப்படும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுவின்’ மாத்திரை காரத் தன்மை (Alkaline) கொண்டது. கரோனா வைரஸ் உடல் செல்களுக்குள் நுழைவதற்கு அமிலத்தன்மை தேவை. ஆக, இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் நம் செல்களின் மேற்பரப்பில் காரத் தன்மை கூடிவிடும். அப்போது கரோனாவால் செல்களுக்குள் நுழைய முடியாது. அடுத்து வைரஸ் நுழைவதற்கு செல்களில் இருக்கும் ACE2 என்சைம் தேவை. அதையும் பெற முடியாது. சிமென்ட் பூசிய செங்கல் சுவரில் வெள்ளைச் சுண்ணாம்பு அடித்துவிட்டால் வெளியில் இருந்து ஈரம் புக முடியாது; உள்ளிருக்கும் ஈரம் வெளியில் வராது. அது மாதிரிதான் இதுவும். சுண்ணாம்பு சுவரைக் காக்கிறது; ‘கார மாத்திரை’ நம் செல்களைக் காக்கிறது.

அடுத்ததாக, கரோனா நோயாளிகளின் வெள்ளை அணுக்கள் இன்டர்லூக்கின், சைட்டோகைன் எனும் தடுப்புப் புரதங்களை அளவுக்கு மீறி உற்பத்தி செய்கின்றன. ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ (Cytokine storm) என்று இதற்கு பெயர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! அதனால் இது நுரையீரலை பாதுகாப்பதற்குப் பதிலாக பாதிக்கிற விஷமாகி விடுகிறது. இதனால்தான் கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சுவாசிப்பது சிரமம் ஆகிறது. அப்போது, தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இதயம், சிறுநீரகம், மூளை போன்றவை அடுத்தடுத்து செயல் இழக்கின்றன. உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதேசமயம் முன்னெச்சரிக்கையாக இந்த மாத்திரையைக் கொடுத்துவிட்டால், உடலில் சைட்டோகைன் உற்பத்திக்கு இது ‘144 தடை’ உத்தரவு போடுகிறது. கரோனா பாதிப்பு கட்டுப்படுகிறது.

கரோனா தொற்றில் உடலுக்குள் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் பெரும் பிரச்சினை. இதற்கு முக்கிய காரணம் இது: உடலுக்குள் ஓடும் ரத்தசாலைகளில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ‘சரக்கு வாகனம்’ எனப்படுவது சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின். இதில் இரும்பு, புரதம் எனும் ‘சக்கரங்கள்’ உண்டு. கரோனா வைரஸ் செய்யும் முதற்காரியம் ஹீமோகுளோபினில் இருந்து இரும்பு சக்கரத்தைக் கழற்றி விடுவதுதான். சக்கரம் கழற்றப்பட்ட வாகனம் சரக்கு விநியோகம் செய்ய முடியுமா?அம்மாதிரியான நிலைமைதான் உடலுக்குள்ளும் ஏற்படுகிறது. ஆக்ஸிஜனை சுமந்து செல்ல வாகனம் கிடைக்காமல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இவர்களுக்கு ‘ஹைட்ராக்ஸி குளோரோகுவின்’ மாத்திரையை கொடுத்ததும் சிவப்பு அணுக்களுக்கு ‘பைலெட்’ கார்மாதிரி பாதுகாப்பு கிடைக்கிறது. அந்த பாதுகாப்பு அரணைத் தாண்டி கரோனாவால் ஹீமோகுளோபின் வாகனத்தை அடைய முடியாது. ஆக்ஸிஜன் விநியோகத்துக்குத் தடை உண்டாகாது. இதன் பலனால் கரோனா பாதிப்பு ஏற்படாது.

வெள்ளம் வருமுன்னர் அணை போடும் வித்தை தெரிந்தது ‘ஹைட்ராக்ஸி குளோரோகுவின்’. மருத்துவப் பணியாளர்களின் தற்காப்புக்கு இதை தரலாம் என்று சொல்லப்படுவதற்கு இதுதான் காரணம். இந்த மாத்திரைக்குப் பக்க விளைவுகளும் உண்டு. மருத்துவர் சொல்லாமல் மற்றவர்கள் இதை சாப்பிடக் கூடாது. இதனோடு சேர்த்துத் தரப்படும் அஸித்ரோமைசின் மாத்திரை உடலில் பாக்டீரியாவால் ஏற்படும் துணை தொற்றைத் தடுக்கிறது.

வைரஸ் எதிர்ப்பு மாத்திரைகள்

சரி, கரோனா உடல் செல்களுக்குள் புகுந்துவிட்டால் என்ன செய்வது? அதற்குதீர்வு தருகின்றன லோபினாவிர், நெட்ஃபினாவர், ரிட்டினோவிர் ஆகிய மாத்திரைகள்! பொதுவாக, கரோனா செல்களுக்குள் புகுந்ததும் தன்னைத் தானே கோடிக்கணக்கில் நகல் எடுத்துக் கொண்டு வளர்ச்சி பெறும். இந்த வளர்ச்சிக்கு உதவும் ஒரு முக்கிய உணவு ‘புரோட்டியேஸ்’ என்சைம் தயாரிக்கும் புரதம். இந்த மருந்துகள் புரோட்டியேஸ் உற்பத்திஆவதை தடை செய்து விடுவதால், உணவு கிடைக்காமல் மடிந்து போகின்றனகரோனா கிருமிகள். வேரில் மருந்து ஊற்றி களையை அழிக்கும் செயல்முறை இது.ஏற்கனவே எய்ட்ஸ், எபோலா போன்றவற்றுக்கு இவற்றை கொடுத்துப் பார்த்து பலன் கிட்டியதால் இப்போது நாவல்கரோனா வைரஸுக்கும் பயன்படுத்துகின்றனர்.

அடுத்ததாக, ஃபிளேவிபிரவிர் மாத்திரை. இது உடல் செல்களின் மேற்பரப்பில் உள்ள புரதங்களோடு பசை போல் ஒட்டி, போர்வை போல் போர்த்திக் கொள்கிறது. இந்தப் போர்வையை விலக்கினால்தான் நாவல் கரோனா செல்லுக்குள் செல்ல முடியும். அது முடியாத காரியம். இந்தப் ‘போர்வை’க்கு அத்தனை வலு. கரோனாவுக்கு கை விலங்கு பூட்டும் முக்கிய மருந்து இது.

முன்பு சார்ஸ், மெர்ஸ் நோய்களுக்குப் பயன்பட்ட ‘ரெம்டெஸிவிர்’ மருந்தும் நாவல் கரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுகிறது. எப்படி? கரோனா வைரஸ் உடல் செல்களுக்குள் நகல் எடுப்பதற்கு ‘ஆர்என்ஏ பாலிமரேஸ்’ எனும் என்சைமை தேடுகிறது. அப்போது அசப்பில் ஒன்று போலிருக்கும் ரெம்டெஸிவிர் மருந்திடம் அது ஏமாந்து விடுகிறது. பால் என நினைத்து பினாயிலை குடித்த கதை ஆகிவிடுகிறது. கரோனா அழிந்துவிடுகிறது.

இன்டர்ஃபெரான் ஆல்பா 2பி

இதை ‘கியூபா மருந்து’ என்று சொன்னால் உடனே புரிந்து கொள்ள முடியும். கியூபாவில் கரோனா பரவியதும் முதியவர்களுக்கும் மோசமான கட்டத்தில் இருந்த நோயாளிகளுக்கும் இந்த மருந்துகொடுக்கப்பட்டது. இது ‘மரபணு மாற்றம்’எனும் நவீன தொழில்நுட்பத்தில் விளையும் மருந்து.

உடலில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்யும் வைரஸ் தடுப்புப் புரதங்களில் இன்டெர்ஃபெரான் என்பதும் ஒன்று.நம் செல்களுக்குள் நாவல் கரோனா நகலெடுப்பதைத் தடுக்கும் ‘ஸ்பெஷல் போலீஸ்’ என்று சொல்லலாம். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்ததும் முக்கிய வேலையாக இவர்களைத்தான் வீழ்த்திவிடுகிறது. அதனால் நோயைக் கொண்டு வருவது சுலபமாகிவிடுகிறது. இந்த நோயாளிகளுக்கு ‘இன்டர்ஃபெரான் ஆல்பா 2பி’ மருந்தைக் கொடுத்ததும் தோற்றுப் போன போலீஸ்களுக்கு ராணுவ பலம் வந்துவிடுகிறது. இப்போது நடக்கும் இரண்டாம் கட்ட போரில் இவர்கள் ஜெயித்து விடுகின்றனர். கரோனாவைநகலெடுக்க முடியாமல் தடுத்து அவற்றின் இறப்புக்கு வழி செய்து விடுகின்றன.

பிளாஸ்மா சிகிச்சை

கரோனாவில் இருந்து மீண்டவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா எனும்திரவத்தை எடுத்து கரோனா நோயாளிக்குக் கொடுப்பது பிளாஸ்மா சிகிச்சை. இதில் கரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு அணுக்கள் (ஆன்டிபாடிகள்) ஏராளமாக இருப்பதால், இதைப் பெற்றுக் கொண்டநோயாளிக்கு கரோனாவை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கிறது. கரோனாவில் இருந்து நம்மைக் காப்பாற்றும் நம்பிக்கை ஒளி இது.

இருந்தாலும் உலகில் எந்த மருந்தும் கரோனாவை 100 சதவீதம் குணப்படுத்துகிறது என்று இதுவரை முடிவாகவில்லை. இப்போதைக்கு கரோனாவில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதுமே முக்கியம். இந்த இரண்டும்தான் நமக்கு கைகண்ட கரோனா மருந்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x