

கரோனா ஊரடங்கில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணனின் தொடர் பணிக்கு தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. ஆனாலும், இன்னும் கரோனா தொற்று பரிசோதனைகள் அதிகரித்து வருகிறது. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் யாவும், வீட்டிற்கே கிடைக்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகிறது தமிழக அரசு. மேலும், அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் துறையினர் இணைந்து பல்வேறு வழிவகைகளைக் கையாண்டு பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைத்து வருகிறார்கள்.
இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த மாவட்டத்தில் மக்களுக்குத் தேவையானவற்றை தனது ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டுக் கூறுபவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
வீட்டிற்குத் தேவையான சிலிண்டர், செல்லப் பிராணிகளுக்கு மருந்து, வயதானவர்களுக்கு மாஸ்க் என பலருக்கும் கிடைக்க வழி செய்துள்ளார். அவ்வாறு வெளிநாட்டில் இருக்கும் பிச்சைராஜா என்பவர் அர்ஜுன் சரவணனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "நான் வெளிநாட்டில் இருக்கிறேன். எனது பெற்றோர்கள் வயதானவர்கள். தச்சநல்லூர் விக்னேஷ் நகரில் வசிக்கிறார்கள். ஏதேனும் எமர்ஜென்சி என்றால் என்ன நம்பரைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.
அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து மாஸ்க், சானிடைசர்கள் ஆகியவற்றைக் காவல்துறையினர் வழங்கியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிச்சை ராஜா ட்வீட்டைக் குறிப்பிட்டு, "நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்பட வேண்டாம் ப்ரோ" என்று தெரிவித்தார்.
அர்ஜுன் சரவணனின் இந்தப் பதிலைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது. சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்!" என்று தெரிவித்தார்.
முதல்வரின் பாராட்டுக்கு அர்ஜுன் சரவணன், "மிக்க நன்றி ஜயா. திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.