

நடப்பாண்டில், 10.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர்க்கடன் வட்டி மானிய திட்டத்தை நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே நீட்டித்ததுடன், மாற்றுத் திட்டத்தையும் மத்திய அரசு ஆலோசித்து வந்தது.
கடந்த ஜூன் 20-ம் தேதி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ‘‘விவசாயிகளுக்கான குறுகிய காலபயிர்க்கடன் வட்டி மானிய திட்டம் தற்பாதுள்ள நடைமுறைகள்படி தொடரவேண்டும். வங்கிகள் முன்னுரிமை பிரிவுகளுக்கு அடிப்படையான வட்டி விகிதத்தில் கடன் வழங்க அனுமதித்தல், பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்குதல் என மத்திய அரசு உத்தேசித்த இரண்டு மாற்றங்களும் பாதகமானவை.
கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்படும் பயிர்க்கடன்களுக்கு மாநில அரசு 4 சதவீதத்தை ஊக்க மானியமாக, மத்திய அரசின் வட்டி மானியத்துடன் சேர்த்து வழங்கி வருகிறது. தற்போதைய நடைமுறையில் மாற்றம் செய்வது கடும் எதிர் விளைவுகளை உருவாக்கும்’’ என தெரிவித்திருந்தார்.
இக்கடிதத்திற்கு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகஸ்ட் 3-ம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில், ’’மத்திய அரசு தற்போதுள்ள வட்டி மானியத்திட்டப்படி 2016 மார்ச் மாதம் வரை குறுகிய கால பயிர்க்கடன்களுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இது தொடர்பாக வேளாண்துறையால் ஒரு குழு அமைக்கப்படும். இக்குழு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களை மேம்படுத்தவும், வட்டி மானிய திட்டத்தின் நிதி ஆதாரங்களை அதிகளவில் பயன்படுத்தவும் பரிந்துரைக்கும்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் நாடு முழுவதும் விவசாயிகள் குறுகிய கால விவசாய கடன் தடையில்லாமல் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 2015-16 ஆண்டில் 10.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி பயிர்க்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.