

திருப்பூரில் இருந்து ஒடிசாவுக்கு நடந்து செல்ல முயன்ற தொழிலாளி மீட்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம் காளஹந்தி மாவட்டம் கெசிங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் நுர்பராஜ் பரிக் (28). ஒரு மாதத்துக்கு முன் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக திருப்பூர் வந்தார்.
பல்லடம் கணபதிபாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி, தையல் தொழிலாளியாகப் பணியாற்றினார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், திருப்பூரில் இருந்து ஒடிசாவுக்கு நடந்தே செல்ல முடிவெடுத்துப் புறப்பட்டார். திருப்பூரில் இருந்து ஈரோடு சென்றபோது, போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். இந்த விஷயம் சக தொழிலாளர்களுக்குத் தெரியவர, அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதைப் பார்த்த பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கலிகேஷ் சிங் தியோ, தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அத்தொழிலாளியை மீட்டு உதவுமாறு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோட்டில் இருந்து மீட்கப்பட்ட நுர்பராஜ் பரிக், மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.
தாய்-மகன் மீட்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை எதுமலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). கோவையில் தங்கி, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது தாயார் லட்சுமிதேவியும் (55) மகனுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருச்சிக்கு நடந்து சென்ற இருவரையும், வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் த.சசிகலா மீட்டு, அரிசி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் கொடுத்து, அவ்வழியாக திருச்சிக்குச் சென்ற லாரியில் அனுப்பி வைத்தார்.