Published : 16 Apr 2020 09:03 PM
Last Updated : 16 Apr 2020 09:03 PM

கரோனா நிவாரணப் பணி; ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்து செயல் திட்டம் தீட்டுக: திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்திடவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டிடவும் உடனடியாகக் குறைந்தபட்சம் முதல் கட்டமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான செயல் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் காணொலி மூலமாக நடந்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் செய்யத் தவறியது, செய்ய வேண்டியது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான விவரம்:

“2019 டிசம்பர் மாதத்தில் கரோனா நோய் தாக்குதலுக்கு சீன தேசம் உள்ளானபோதும், 2020 ஜனவரி மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் பொது சுகாதார நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவித்த பின்னரும், அவற்றை எச்சரிக்கை மணிகளாக எடுத்துக்கொள்ளாமல், மத்திய பாஜக அரசு அமைதி காத்தது.

கரோனா நோய் பாதிப்பிற்கு உள்ளானவர் முதன் முதலில் ஜனவரி 30 ஆம் தேதி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும்கூட, இந்த நோயின் கொடூரத்தை மத்திய அரசு உணர்ந்து - நோய்த் தொற்று பரவி விடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவில்லை.

அமெரிக்க அதிபரின் இந்திய வருகை கொண்டாட்டத்திலும், மத்திய பிரதேச ஆட்சிக் கவிழ்ப்புக்காகக் காத்திருந்தும் - முக்கியமான காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட ஒத்திவைக்க மறுத்து - இறுதியில் தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற புறக்கணிப்பை அறிவித்த பிறகே நாடாளுமன்றத்தை முன் கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய பாஜக அரசு தாமதமாக முடிவு செய்தது.

மார்ச் 19 ஆம் தேதிதான் சுய ஊரடங்கை அறிவித்து - கரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தை சிறிது சிறிதாகப் புரிந்துகொள்ள மத்திய அரசு முயற்சித்தது. ஆனாலும் கை தட்டுவதிலும், லைட் வெளிச்சம் ஏற்படுத்துவதிலும் - ஒலி, ஒளிக் காட்சிகளில் காட்டிய ஆர்வத்தை, மாநிலங்கள் கோரும் நிதியை ஒதுக்குவதிலோ, நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதிலோ காட்டவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

நாடாளுமன்றம் அனுமதித்து - உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை இரு வருடங்களுக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கும் இந்த ஜனநாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தத்தமது தொகுதியில் கரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கும் - தொகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும் செலவிட அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கரோனா நோயால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 1.5 சதவீதமாக குறையும் என்று தெற்காசிய நாடுகளுக்கான உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது. இது கடந்த 29 வருடங்களில் இல்லாத அளவிற்கான இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி. ஏற்கெனவே 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போதைய ஊரடங்கால் 23.4 சதவீதமாக அதிகரித்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வளவு தீவிரமான - கொடூரமான - மனித உயிர்களைக் கொத்துக் கொத்தாகப் பறிக்கும் தன்மை கொண்ட கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கோ - பொருளாதாரச் சீரழிவை நிமிர்த்துவதற்கோ - மாநில அரசுகளுக்குத் தகுந்த உதவி செய்வதற்கோ, மத்திய அரசு தொலை நோக்குப் பார்வையின்றி, இன்னும் தயங்கி நிற்பது ஏன் என்று வல்லுநர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இந்த நோயைச் சமாளிக்கத் தேவையான சுகாதார உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய், டிசம்பர் மாதம் வரையிலான மாநிலங்களின் பங்கான ஜி.எஸ்.டி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி என எதையும் மத்திய அரசு உரிய காலத்தில் விடுவிக்காமல் மாநில அரசுகளை, வரலாறு காணாத இந்த நெருக்கடியிலும் வஞ்சித்து வருகிறது.

மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பெயரளவிற்கு 510 கோடி ரூபாயை மட்டும் தமிழகத்திற்கு வழங்கியிருக்கும் மத்திய அரசு - முதல் கட்டமாக மாநிலங்களுக்குத் தேவைப்படும் நிதியை ஒதுக்க மறுத்து வருகிறது. மோசமான சுகாதாரப் பேரிடரை மாநிலங்களே சமாளித்துக் கொள்ளட்டும் என்று கூட்டாட்சித் தத்துவத்தைக் கைவிட்டுள்ள மத்திய பாஜக அரசு, கரோனா நோய் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை மட்டும் நாங்களே மையப்படுத்தி கொள்முதல் செய்து தருகிறோம் என்று கூறி - முதல் ஊரடங்கு முடியும் வரை எவ்வித மருத்துவ உபகரணங்களும் மாநிலங்களுக்கு வழங்காமல் இருப்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம், கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகவே மத்திய அரசிடம் உள்ள மாநிலங்களின் நிலுவைத் தொகை, மாநிலப் பேரிடர் நிதி, சுகாதாரப் பேரிடருக்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி நிதி உள்ளிட்டவற்றை மட்டுமின்றி - தமிழ்நாடு கேட்கும் நிதியுதவிகளை, மாநிலங்களிடையே பாஜக ஆளும் மாநிலங்கள் - ஆளாத மாநிலங்கள் என்ற பாகுபாடு காட்டாமல், நியாயமான முறையில் அளித்திடவும், மற்றும் கோரும் கடன் தொகை, சிறப்பு மானியங்கள் போன்றவற்றை, அரசியல் லாப - நட்டக் கணக்குப் பார்க்காமல் வழங்கிடவும் மத்திய அரசு உடனடியாக முன்வந்து அனைத்து மாநில மக்களும் இந்திய மக்களே - ஒரு தாய்ப் பிள்ளைகளே - எமது மக்களே என்ற பரந்த சிந்தனையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் தனிமைப்படுத்தாமல், அனைத்து மக்களுக்கும் சோதனை செய்து, நோய்த் தடுப்பு நடவடிக்கையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்வது மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகும். இதுபோன்ற நோயின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு, நமது அணுகுமுறை இருக்க வேண்டும்.

கரோனா நோய் பாதிப்பிலிருந்து கேரள மாநிலத்தை மீட்க அம்மாநில அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி - அதற்கான செயல்திட்டத்தைத் தயாரித்து, முற்போக்கான வழியில், செயல்படுத்தி, மாதிரி மாநிலமாக உருவாகி வருகின்ற வேளையில்; தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காத மத்திய அரசை தட்டிக்கேட்கத் தைரியம் இல்லாமல் - யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதுபோல், வெறும் 3,280 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை ஒதுக்கிவிட்டு முற்றிலும் செயலிழந்து நிற்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனை தெரிவிக்கிறது.

மாநிலத்திற்குத் தேவையான நிதியை உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற வேண்டும் என்றும், ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தேவையான நிவாரண உதவிகளைச் செய்திடவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டிடவும் உடனடியாகக் குறைந்தபட்சம் முதல் கட்டமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான செயல் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x