

ரமலான் மாதத்தில் இரவு சிறப்புத் தொழுகையை (தராவிஹ்) பள்ளிவாசல்களில் தொழக்கூடாது. வீட்டிலேயே தொழ வேண்டும் என ஷியா, சன்னி தலைமை காஜிக்கள் அறிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று நோன்பிருப்பது. இஸ்லாமின் முக்கிய மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது. குர் ஆனின் இறை வசனங்கள் இறக்கப்பட்ட மாதமாக ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து, ஏழை எளியவர்களுக்கு ஜகாத் எனப்படும் உதவிகளையும் வருமானத்தில் 7-ல் ஒரு பங்கையும் வழங்குவார்கள்.
வழக்கமாக ஐந்து வேளை தொழுகை செய்ய வேண்டும். இந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக தராவிஹ் எனப்படும் சிறப்புத் தொழுகை இரவு 9 மணிக்கு தொழப்படும். இந்நிலையில் ரமலான் மாதத்தில் தராவிஹ் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், இஸ்லாமியர்களின் சன்னி பிரிவு தலைமை காஜி சலாவுதீன் மற்றும் ஷியா பிரிவு காஜி குலாம் முகமது ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த தலைமை காஜிக்கள், நோன்புக் காலங்களில் பள்ளிவாசல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.