

நல வாரியத்தில் பதியாத கலைகளுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்க பாட்டுப்பாடி வலியுறுத்திய ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்புறக் கலைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் கிராமத் திருவிழாக்கள் மூலம் வருவாய் ஈட்டி குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அரசு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் சார்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ராமநாதபுரத்தில் பெரும்பாலான கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை என்றும், அதனால் அவர்களுக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை.
அதனால் இன்று பரமக்குடி வட்டம் பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் செல்வம்(42) என்பவர் சக கலைஞர்களுடன் தங்களது வீடுகள் முன்பு மேள தாளம் முழங்கி, பாட்டுப்பாடி கோரிக்கையை வலியுறுத்தினார்.
ஆனால், ஊரடங்கை மீறி கலைஞர்களைக் கூடுவதற்கு வழிவகுத்ததாக செல்வத்தை நயினார்கோவில் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.