ரேஷன்கடைகளுக்கு அனுப்பிய அரிசி, சர்க்கரை மூடைகளில் எடை குறைவு: விற்பனையாளர்கள் அதிருப்தி

ரேஷன்கடைகளுக்கு அனுப்பிய அரிசி, சர்க்கரை மூடைகளில் எடை குறைவு: விற்பனையாளர்கள் அதிருப்தி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன்கடைகளுக்கு அனுப்பிய அரிசி, சர்க்கரை மூடைகளில் 2 முதல் 4 கிலோ வரை எடை குறைந்ததால் விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் பலர் வருமானமின்றியும், உணவுப்பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கின்றனர்.

இதையடுத்து அரசு சார்பில் நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், 19 கிலோ அரிசி, ஒரு கிலோ கோதுமை, ஒரு கிலோ துவரம் பருப்பு, குடும்ப உறுப்பினருக்கு ஏற்ப சர்க்கரை, ஒரு லிட்டர் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே டோக்கனுடன் ரூ.1,000 வழங்கியநிலையில், ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தினமும் 50 முதல் 100 நபர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் 3.8 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

ரேஷன்கடைகளுக்கு அந்தந்த வட்ட நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், கோதுமை போன்றவை அனுப்பப்படுகின்றன. சாக்கு எடையும் சேர்த்து அரிசி மூடை 50 கிலோ 400 கிராம் இருக்க வேண்டும்.

ஆனால் ஒவ்வொரு மூடையிலும் 46 கிலோ மட்டுமே உள்ளது. அதேபோல் சர்க்கரை மூடை 50 கிலோ 200 கிராம் இருக்க வேண்டும். ஆனால் 48 கிலோ மட்டுமே உள்ளது. அதேபோல் பாமாயிலில் 10 லிட்டர் பாமாயில் பாக்கெட் கொண்ட பெட்டியில் ஒரு லிட்டர் பாக்கெட் குறைகிறது.

இதனால் விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்த எடை குறைவால் குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியாக பொருட்கள் விநியோகிக்க முடியாதநிலை உள்ளது.

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறுகையில், ‘ இதுகுறித்து புகார் வந்துள்ளது. இதனால் ரேஷன்கடை விற்பனையாளர்களே குடோன்களில் நேரடியாக எடை போட்டு அரிசி, சர்க்கரை மூடைகளை எடுத்து செல்ல அறிவுறுத்தியுள்ளோம்,’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in