

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.16) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
தமிழகத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 22 சிவப்பு மண்டல மாவட்டங்களில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
நோய்த்தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற பகுதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பச்சை நிறம் என்பது அந்த மாவட்டத்தில் நோய்த்தொற்று ஏற்படாத பகுதியாகும். ஆரஞ்சு என்பது 1 முதல் 15 கரோனா நோயாளிகள் இருக்கும் பகுதிகளாகும். அதற்கு மேற்பட்டவை எல்லாம் சிவப்புப் பகுதிகளாகும். இப்போது என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோமோ அதேதான் அந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு ரேபிட் கிட் எப்போது வரும்?
ரேபிட் கிட் வெளிநாடுகளில் இருந்து விலைக்கு வாங்கப்படுபவை. அதற்கான முதல்கட்டத் தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால், நமக்கு வர வேண்டியது வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டது. இருந்தாலும் சீனாவில் இருந்து வாங்குவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசும் சீனாவில்தான் ஆர்டர் செய்திருக்கிறது. ரேபிட் கிட் இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் இன்னும் வரவில்லை. ரேபிட் கிட்டை குறுகிய காலத்தில் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் நோய்ப் பரவல் இப்போது எந்த நிலையில் உள்ளது?
இன்னும் இரண்டாம் நிலையில் தான் உள்ளது, நோயின் தாக்கம் குறைந்துவிட்டது. இன்னும் 2-3 நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் பரிசோதிக்கிறோம். 2-3 நாட்களில் புதிதாக வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகிவிடும் என என்ணுகிறோம்.
ஏப்.20-க்குப் பிறகு விதிகள் தளர்த்தப்படும் தொழில்கள் என்னென்ன?
முழுமையான வழிமுறைகள் இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதற்கென நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு மத்திய அரசுடன் ஆலோசித்து தெரிவிப்பார்கள். ஏப்.20 ஆம் தேதியிலிருந்து 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் தொடங்கப்படும். வேளாண் பணிகளையும் மேற்கொள்ளலாம். உணவு சம்பந்தமான தொழிற்சாலைகளைத் தொடங்கலாம். அவை தொடங்கப்படும் போது வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால் மக்கள் சிரமமின்றி இருப்பர். மே மாதத்துக்கு உண்டான உணவுப்பொருட்கள் அனைத்தையும் கூட்டுறவுத்துறை மூலமாக மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.
பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு என்னென்ன நிவாரணங்கள் வழங்கப்படும்?
சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பூதியமாக வழங்கப்படும். யாராவது கரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பளத்துடன் சேர்த்து 2 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இதனால் துரதிர்ஷ்டவசமாக இறப்பு நேரிட்டால் 5 லட்ச ரூபாய் நிவாரணம் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுமா?
இது பணக்காரர்களுக்கு வந்த நோய். ஏழைகளுக்கு எங்கு வந்தது? பணக்காரர்களால் கொண்டு வரப்பட்ட நோய் இது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த நோய் இது. ஏழைகளுக்கு நோய் இல்லை. அவர்களிடம் தாராளமாகப் பேசலாம். பணக்காரர்களைக் கண்டால் தான் பயமாக இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று வந்து நோயை இறக்குமதி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த நோய் உருவாகவில்லை.
ரமலான் நோன்பு வரவிருக்கிறது. அவர்கள் நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்காக ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசின் சார்பில் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. 4,480 மெட்ரிக் டன் அரிசி இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றது. இதற்காக ஜமாத் தலைவர்களை தலைமைச் செயலாளர் இன்று மாலை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பேசவிருக்கிறார். எப்படி நோன்பு கடைப்பிடிக்க வேண்டும்? என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். தமிழகத்தில் 2,895 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இதன் மூலமாகத்தான் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.