

கரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதத்திலேயே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கரோனா தாக்குதல் ஆரம்பமான மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்து மூடப்பட்டன. சமூக விலகலுக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனால் பள்ளித் தேர்வுகள், கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போயின. 1 முதல் 9 -ம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சியடைந்ததாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளின் நிலை என்ன என்கிற நிலையில் தற்போது உயர் கல்வித்துறைச் செயலர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், உயர் கல்வித்துறைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“ தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதலைச் சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்துக் கல்லூரிகளுக்கும் மார்ச் 17-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து இங்கு கல்வி பயில்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் அடுத்த பருவம் அல்லது அடுத்த செமஸ்டரின் தொடக்கத்தில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்” .
இவ்வாறு அபூர்வா தெரிவித்துள்ளார்.