ஹாட்ஸ்பாட் பட்டியலில் குமரி: போலீஸார் கட்டுப்பாட்டில் கரோனா பாதித்த பகுதிகள்- தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஹாட்ஸ்பாட் பட்டியலில் குமரி: போலீஸார் கட்டுப்பாட்டில் கரோனா பாதித்த பகுதிகள்- தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
Updated on
1 min read

குமரி மாவட்டம் ஹாட்ஸ்பாட் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் போலீஸாரின் முழு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. மேலும் நோய்தொற்ற தடுப்பு பணிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் பட்டியலில் இடம் பிடித்தது.

குமரியில் இதுவரை 16 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாட்ஸ்பாட் பட்டியலில் குமரி இடம்பெற்றதை தொடர்ந்து கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் கரோனா நோய்தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் வசிக்கும் டென்னிசன் ரோடு, வெள்ளடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல், தேங்காய்பட்டணம் ஆகிய இடங்களை பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இப்பகுதிகள் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து போலீஸாரின் முழு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் நோய் தொற்று குறித்து சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் கண்காணித்து கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் குமரி மாவட்டம் முழுவதும் நகர, கிராம வாரியாக சளி, இருமல், காய்ச்சல் அறிகுறியுடன் காணப்படுவோர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in