Published : 16 Apr 2020 02:45 PM
Last Updated : 16 Apr 2020 02:45 PM

கரோனா பெருந்தொற்றை எதிர்க்கும் ஆற்றல் இந்திய மக்களுக்கு இயல்பிலேயே உண்டு: மூத்த விஞ்ஞானி மாரியப்பன் பேட்டி 

'கரோனா’ வைரஸை எதிர்க்கும் ஆற்றல் இந்திய மக்களுக்கு இயல்பாகவே அவர்களது உடலில் உண்டு என்று கொசுத் தடுப்பு ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய ‘கரோனா’ வைரஸ் தொற்று நோய், தற்போது உலகையை அச்சுறுத்துகிறது. பொருளாதாரம், மருத்துவம், தொழில்துறையில் உலகின் பெரும்பணக்கார நாடுகளே இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தியாவில் இந்த தொற்றுநோய் சமூகப் பரவலை அடையாமல் ஒரளவு கட்டுக்குள்ளாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் ஜீன்களை இயல்பாகவே இந்திய மக்கள் கொண்டுள்ளதாகவும், அதனாலே உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது என்றும் கூறுகிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கொசுத் தடுப்பு ஆய்வு மையத்ததின் மூத்த விஞ்ஞானியும், பல்வேறு மாநில சுகாதாரத்துறை ஆலோசகருமான மாரியப்பன்.

மேற்கு வங்காளத்தில் உள்ள அலிப்பூர்துவார் என்னும் இடத்தில் கடந்த டிசம்பரில் மூன்று விதமான தொற்று நோய்கள் வந்ததைக்க் கண்டுபிடித்து அதை தடுக்க ஆலோசனைகளை வழங்கினார். இத்துறையில் 40 ஆண்டுகால அனுபவம் கொண்ட மாரியப்பன் அளித்த பேட்டி வருமாறு:

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிய ‘கரோனா’ இந்தியாவில் கட்டுக்குள் இருக்கக் காரணம் என்ன?

கரோனா வைரஸ் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களில் ஏற்படுத்தியதைப் போன்ற தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தாமைக்கு முக்கியக் காரணம், தட்பவெப்பநிலையும், இங்குள்ள மக்களின் உடம்பில் உள்ள இயல்பான ஜீன் அமைப்பும்தான்.

கரோனா பெருந்தொற்றை எதிர்க்கும் ஆற்றல் இந்திய மக்களுக்கு இயல்பிலேயே உண்டு. மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக இருப்பதும் மற்றொரு காரணம். குளிர்ப்பிரதேசம் இல்லாத இந்தியா போன்ற நாடுளில் எல்லாவிதமான வைரஸ்களும் இருக்கும். பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படும் போது குறிப்பிட்டகாலம் வரை அது பரவும். பிறகு தானாகவே அடங்கிவிடும்.

சார்ஸூம், கரோனாவும் ஒன்றா?

கடந்த 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு விதமான வைரஸ்கள் உலகம் முழுவதும் தோன்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சின்ட்ரோம் என்று அழைக்கக்கூடிய சார்ஸ். கடந்த 2003-ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளைத் தாக்கியது. 16 நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் கூடுதலாக இருந்தது. இதுவும் கூட ‘கரோனா’ வைரஸை ஒட்டியதுதான். விலங்குகளில் இருந்து மனிதரிடம் பரவக்கூடிய ஒன்று. கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நமது நாட்டில் எந்தவித பாதிப்பையும் இந்த வைரஸ் ஏற்படுத்தவில்லை.

‘கரோனா’ வைரசை முழுமையாக கட்டுப்படுத்தமுடியுமா?

ஐசிஎம்ஆரின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வைராலஜி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொற்று நோய்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அதுகுறித்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பரவிய சிகா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியதும் இந்த நிறுவன ஆய்வுகளின் வெளிப்பாடுதான். குஜராத் மாநிலத்தில் இருவருக்கும், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் ஒருவருக்கும் இந்த சிகா வைரஸ்சின் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகப் பரவக்கூடிய இந்த வைரஸை இனம் கண்டு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தோம். அதேபோன்று கோவிட் 19 என்ற கரோனா தொற்றை முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே உடனடியாகவும், முழுமையாகவும் கட்டுப்படுத்த முடியும்.

‘கரோனா’ வைரஸ், இதற்கு முன்பே வந்த நோயா?

நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வைரலாஜி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜி.வர்கீஸ் மற்றும் கல்யாண் பானர்ஜி ஆகியோர் கடந்த 1990-ஆம் ஆண்டே கரோனா வைரஸ் வவ்வால் மூலமாகத்தான் மனிதர்களுக்குப் பரவுகிறது என்பதை கட்டுரையாகப் பதிவு செய்திருந்தனர்.

வவ்வால் மூலமாகப் பரவிய கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் கடந்த 1985-ஆம் ஆண்டே ஒருவர் பாதிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதையும், அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய விஞ்ஞானிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குறித்து செய்து வரும் பல்வேறு ஆராய்ச்சிகள், இன்றைக்கு கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பாடமாக அமைந்துள்ளது.

வவ்வால் மூலமாகப் பரவக்கூடிய வாய்ப்புள்ள பிற வைரஸ்களைக் கட்டுப்படுத்தியதுபோன்றே கரோனாவையும் முழுமையாக அவர்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x