

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டது. மீறி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்தில் வீணாகி துருப்பிடிக்க வாய்ப்புண்டு. ஆகவே, அவற்றை விடுவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையின்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை, 10 நபர்களுக்கு என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். தேவைப்படின் அதிகப்படியாக பகல் 1 மணி வரை வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.
இத்தருணத்தில் சமூக இடைவேளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்.
மார்ச் 24-ம் தேதி அன்று முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்திற்கு வந்து வாகனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் முன்னதாகவே அனுப்பப்படும். தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்.
வாகன உரிமையாளர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
1) வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர் நகல்
2) வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்
3) வாகனத்தின் ஆர்.சி. புக் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்”.
இவ்வாறு டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.